கனமழை பெய்தாலும் எதிர்கொள்வோம் - மேயர் பிரியா

சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தரப்பில் குறைகள் வரப்பெற்று சரி செய்யப்பட்டு வருகிறது என்று மேயர் பிரியா கூறினார்.

Update: 2023-11-22 18:25 GMT

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல, தாழ்வான பகுதிகளில் மோட்டார் பம்புகள் மூலம் மழைநீர் அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தண்டையார்பேட்டை வ.உ.சி. நகர், இளையா நகரில் மோட்டார் பம்புகள் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணியை மேயர் பிரியா ஆய்வு செய்தார். பின்னர் திரு.வி.க.நகர் அங்காளம்மன் கோவில் தெரு, சிவராவ் தெருவிலும் மழைநீரை வெளியேற்றும் பணியை ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் மேயர் பிரியா கூறியதாவது:-

சென்னையில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே நாளில் 17 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தண்ணீர் தேங்கிய இடங்களை நான் உட்பட மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறோம்.

கடந்த ஆண்டில் கூட இப்பகுதியில் முட்டு அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. ஆனால், இப்போது அந்த அளவுக்கு கூட தண்ணீர் தேங்கவில்லை. குறைவாகவே தேங்கியுள்ளது. பட்டாளம் பகுதியில் சிறிய கால்வாய் ஒன்று செல்கிறது. அதை இன்னும் மறுசீரமைப்பு செய்ய வேண்டிய தேவை உள்ளது. வரக்கூடிய நாட்களில் இந்த கால்வாயை மறுசீரமைப்பு செய்துவிட்டால் தண்ணீர் தேக்கம் இருக்காது.

சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தரப்பில் குறைகள் வரப்பெற்று சரி செய்யப்பட்டு வருகிறது. இதேபோல, 94454 77205 என்ற எண்ணில் 'வாட்ஸ் அப்' மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னையில் 23 ஆயிரம் பணியாளர்கள் களப்பணியில் உள்ளனர். இதுபோக வார்டுக்கு 10 பேர் வீதம் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேர பணியிலும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வரக்கூடிய நாட்களில் கனமழை பெய்தாலும் அதையும் எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மத்திய வட்டார துணை கமிஷனர் பிரவீன் குமார், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்