உடுமலை அருகே தளியில் அமையவுள்ள எத்தலப்ப நாயக்கர் நினைவு அரங்கம் மற்றும் உடுமலை நகராட்சி மன்ற வளாகத்தில் அமையவுள்ள அவரது திருவுருவச்சிலை ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
நினைவு அரங்கம்
சுதந்திரப்போராட்ட வீரர், தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்ப நாயக்கரின் வீரம் செறிந்த வரலாறு பலருக்கு முன்னுதாரணமாக உள்ளது. ஆங்கிலேயரை தீரமாக எதிர்த்ததுடன் ஆங்கிலேய தூதுவனை தூக்கிலிட்டு ஆங்கிலேயருக்கு சவால் விட்ட வரலாறு இன்றளவும் நினைவு கூறப்பட்டு வருகிறது.
அவருடைய வீர வரலாற்றை காலம் காலமாக போற்றி மகிழும் வகையிலும், இளைய தலைமுறையினருக்கு அவருடைய வரலாற்றை கொண்டு செல்லும் வகையிலும் நினைவு அரங்கம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
காணொலி காட்சி
இந்தநிலையில் கடந்த ஆண்டு 2021-22-ம் ஆண்டு செய்தி மக்கள் தொடர்புத்துறை மானியக் கோரிக்கையின் போது உடுமலையையடுத்த மஜரா திருமூர்த்தி நகர் தளி 2 கிராமத்தில் ரூ.2½ கோடியில் அரங்கம் அமைக்கவும், உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் அவரது திருவுருவச்சிலை அமைக்கவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி நேற்று அதற்கான அடிக்கல் நாட்டு விழாவை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். உடுமலை நகராட்சி அலுவலக்கூட்ட அரங்கில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் மு.மத்தீன், துணைத்தலைவர் கலைராஜன், ஆணையாளர் சத்தியநாதன் மற்றும் கவுன்சிலர் கலந்து கொண்டனர்.