மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டி

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகின்ற 12-ந் தேதி சிவகங்கையில் நடைபெறுகிறது

Update: 2023-07-07 18:45 GMT

சிவகங்கை, ஜூலை.8-

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகின்ற 12-ந் தேதி சிவகங்கையில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு நாள்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு என பெயர் சூட்டப்பெற்ற 18.7.1967-ம் நாளினை பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 18-ம் நாள் தமிழ்நாடு நாளாக சிறப்பாக கொண்டாடப்பெறும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகின்ற 12-ந் தேதி 9.30 மணியளவில் சிவகங்கை, மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கத்தில் தனித்தனியே நடத்தப்பெறவுள்ளன.

மாவட்ட அளவில் நடத்தப்பெறும் இப்போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.10000, 2-ம் பரிசாக ரூ.7000, 3-ம் பரிசாக ரூ.5000 மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

மாணவர்களுக்கு போட்டிகள்

சிவகங்கை மாவட்டத்தில் செயற்பட்டுவரும் அனைத்து பள்ளிகளில் (அரசுப்பள்ளிகள், அரசு நிதியுதவிபெறும் பள்ளிகள், பதின்ம பள்ளிகள்) 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் கீழ்நிலை அளவில் இப்போட்டிகள் நடத்தப்ப்பட்டு கட்டுரை, பேச்சுப்போட்டிக்கு தனித்தனியே 60 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்படும் பட்டியலில் இடம் பெறும் மாணவர்கள் மட்டுமே மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் பங்கேற்க முடியும். இதில் பங்கேற்க விரும் மாணவர்கள் உரிய படிவத்தை நிறைவு செய்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்பம் பெற்று போட்டி நடக்கும் நாளன்று மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம். இது தொடர்பான மேலும் விவரங்களை சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி துறை அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்