ஈரோடு இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

Update: 2023-01-30 03:48 GMT

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக காங்கிரஸ் கட்சியை சோ்ந்த திருமகன் ஈவெரா இருந்தார். அவர் கடந்த 4-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து தேர்தல் நடைமுறை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்கள். தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் இந்த அணிகளின் சார்பிலும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

பா.ஜ.க.வை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் எந்த அணிக்கு ஆதரவு அல்லது தனித்து போட்டியிடுவதா? என்ற நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. தே.மு.தி.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன. இதில் தே.மு.தி.க. வேட்பாளராக ஆனந்த், அ.ம.மு.க. வேட்பாளராக சிவபிராந்த் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். பா.ம.க.வும், சமத்துவ மக்கள் கட்சியும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், யாருக்கும் ஆதரவு கிடையாது என்றும் அறிவித்து உள்ளன.

இந்தநிலையில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தவற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு செல்லும் வழிகள் சுவற்றில் ஒட்டப்பட்டன. மேலும், 100 மீட்டர் தூரத்துக்கு எல்லை கோடுகளும் வரையப்பட்டன.

தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வருகிற 3-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆனந்த் நாளை மறுநாளும் (புதன்கிழமை), அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாந்த் 3-ந் தேதியும் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள்.

வருகிற 7-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 8-ந் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படுகிறது. 10-ந் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2-ந் தேதியும் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்