ஈரோடு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி 12-ந்தேதி தேர்தல் பிரசாரம்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பில் அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பில் அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வருகிற 12-ந்தேதி முதல் பிரசாரம் தொடங்குகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. 12-ந்தேதி பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 5 நாட்கள் தீவிர பிரசாரம் செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பின்னர் தேர்தலுக்கு முந்தைய 2 நாட்களிலும் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார். 13-ந்தேதி மாலையில் திருநகர் காலனியில் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசுகிறார். தொடர்ந்து 2 நாட்கள் வேட்பாளருடன் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுகிறார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.