கோர்ட்டில் புகுந்து மதபோதகரை வெட்ட முயன்ற வாலிபர் கைது

நெல்லை கோர்ட்டில் ஆஜராக வந்த மதபோதகரை வெட்ட முயன்ற வாலிபரை போலீஸ்காரர் துப்பாக்கி முனையில் மடக்கிப்பிடித்து கைது செய்தார்.

Update: 2022-07-19 20:02 GMT

நெல்லை கோர்ட்டில் ஆஜராக வந்த மதபோதகரை வெட்ட முயன்ற வாலிபரை போலீஸ்காரர் துப்பாக்கி முனையில் மடக்கிப்பிடித்து கைது செய்தார்.

வெட்ட முயற்சி

நெல்லை பாளையங்கோட்டை- தூத்துக்குடி ரோட்டில் நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள மகிளா கோர்ட்டில் ஒரு வழக்கு விசாரணைக்காக நெல்லை அருகே உள்ள தாழையூத்து பகுதியை சேர்ந்த மதபோதகரான ஜோஸ்வா இமானுவேல் என்பவர் வந்திருந்தார். அவர் கோர்ட்டில் இருந்தபோது வாலிபர் ஒருவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜோஸ்வா இமானுவேலை வெட்டிக் கொலை செய்ய பாய்ந்து சென்றார்.

துப்பாக்கி முனையில்...

அப்போது மற்றொரு வழக்கில் கைதியை ஆஜர்படுத்துவதற்கு அழைத்து வந்த போலீஸ்காரர் வேணுகோபால் என்பவர் விரைந்து செயல்பட்டு அரிவாளுடன் வந்த நபரை துப்பாக்கி முனையில் மடக்கினார்.

பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற போலீசார் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்தனர். தொடர்ந்து அந்த வாலிபர் பாளையங்கோட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பரபரப்பு தகவல்கள்

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, பிடிபட்ட வாலிபர் தாழையூத்து பாப்பான்குளத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நவநீதகிருஷ்ணன் (வயது 30) என்பது தெரியவந்தது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பரபரப்பு தகவல்களும் வெளியானது. அதாவது மதபோதகர் ஜோஸ்வா இமானுவேல் கடந்த சில ஆண்டுகளாக தாழையூத்து பகுதியில் வீட்டில் வைத்து ஜெபம் செய்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண், நவநீதகிருஷ்ணனின் தங்கையை ஜோஸ்வா இமானுவேலுவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து நடந்த பிரச்சினைகளால் மனமுடைந்த அந்த பெண் கடந்த 2016-ம் ஆண்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

பழிக்குப்பழி

இது நவநீதகிருஷ்ணனுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தங்கை இறப்புக்கு பழிக்குப்பழியாக ஜோஸ்வா இமானுவேல் உள்ளிட்டவர்களை கொலை செய்ய நவநீதகிருஷ்ணன் முடிவு செய்தார். அதன்படி 2017-ம் ஆண்டு தாழையூத்தில் பூரணவள்ளி என்ற பெண்ணை கொலை செய்தார். மேலும் மதபோதகரின் கார் டிரைவரான வினோத் என்பவரை நெல்லை மேலப்பாளையம் பகுதியில் வைத்து கொலை செய்ய முயன்றார்.

இந்த சம்பவங்கள் குறித்து நவநீதகிருஷ்ணன் மீது தாழையூத்து மற்றும் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து இருந்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

வாலிபர் கைது

இந்த நிலையில் ஜோஸ்வா இமானுவேலை கொலை செய்யும் நோக்கத்துடன் அவரை பின் தொடர்ந்து கோர்ட்டுக்கு வந்துள்ளார். அவர் கோர்ட்டுக்குள் சென்று விட்டதால் அங்கு வைத்து வெட்டிக் கொலை செய்ய நவநீதகிருஷ்ணன் முயற்சித்துள்ளார்.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நவநீதகிருஷ்ணனை கைது செய்தனர். நெல்லை கோர்ட்டில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்