தண்டவாளத்தில் தலை வைத்து என்ஜினீயர் தற்கொலை - காதல் தோல்வி காரணமா?

என்ஜினீயர் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2024-07-09 10:17 GMT

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தேக்கம்பட்டி ஊராட்சி தே.கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மனைவி உஷா. ஏழுமலை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் இறந்துவிட்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருந்தனர். இதில் இளைய மகன் நவீன் குமார் (வயது 22). என்ஜினீயர்.

இதற்கிடையே நவீன்குமார் நேற்று முன்தினம் மாலை உறவினர் ஒருவரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த தாய் மற்றும் உறவினர்கள் நவீன்குமாரை பல்வேறு இடங்களில் தேடினர். நவீன்குமார் அழைத்து சென்ற உறவினரிடமும் விசாரித்தனர். நவீனை பற்றிய தகவல் தெரியவில்லை.

இந்த நிலையில் சர்க்கரை செட்டிப்பட்டி கிராமம் 4 கால் பாலம் பகுதியில் அவரை தேடிய போது அங்குள்ள சேலம்- சென்னை ரெயில்வே பாலத்தின் அருகில் நவீன்குமாரின் மோட்டார் சைக்கிள் நின்றது. இதைப்பார்த்த உறவினர்கள் அவரை அந்த பகுதியில் தேடினர். அவரை காணவில்லை. உடனே அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர்.

சிறிது தூரத்தில் தண்டவாளத்தில் செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது நவீன்குமார் முகம் சிதைந்து உயிரிழந்து கிடந்ததை கண்டு கதறி அழுதனர். தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நவீன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நவீன்குமார் காதல் தோல்வி காரணமாக விரக்தி அடைந்து தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனினும் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்