மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மணல் அள்ளப்பட்டுள்ள விவரம் குறித்து நவீன தொழில்நுட்ப கருவி மூலம் கணக்கிட்டனர்.

Update: 2023-10-15 17:59 GMT

மணல் குவாரிகள்

தமிழகத்தில் மணல் குவாரிகளில் முறைகேடு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்களது தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையின் தொடர்ச்சியாக அரசு மணல் குவாரிகளிலும் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு சோதனை தொடங்கியது. இதில் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளில் மணல் அள்ளப்பட்டுள்ள அளவை பார்வையிட்டனர். இந்த தொடர் சோதனையின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் அரசு மணல் குவாரிகளில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

தொழில்நுட்ப கருவி மூலம் அளவீடு

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் வெள்ளாற்றில் அரசு மணல் குவாரி உள்ளது. இந்த குவாரி தற்போது இயங்கவில்லை. இந்த மணல் குவாரியில் சோதனையிட நேற்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 பேர் வந்தனர். அவர்கள் குவாரியில் மணல் தோண்டப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டனர்.

மேலும் நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் மணல் தோண்டப்பட்ட அளவை கணக்கிட்டனர். மேலும் டிரோன் மூலமும் மணல் குவாரியின் பரப்பளவை கணக்கிட்டு, எந்தெந்த இடத்தில் மணல் தோண்டப்பட்டுள்ளது, எவ்வளவு ஆழத்தில் தோண்டப்பட்டிருக்கிறது என்பதை கணக்கிட்டனர். இதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தும் வல்லுனர்களும் உடன் வந்திருந்தனர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்

இதேபோல் ஆவுடையார்கோவில் அருகே ஆமாஞ்சி, மணமேல்குடி அருகே பானாவயல் ஆகிய இடங்களில் வெள்ளாற்றில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையின் போது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனை இன்று காலையில் தொடங்கி மாலையில் முடிவடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்