அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை - வழக்கறிஞர் தகவல்

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்.

Update: 2023-06-13 21:18 GMT

சென்னை,

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வந்தது.

இந்த சூழலில் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு அடைந்தது. காலை 8 மணி முதல், சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது. இதேபோல அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டிலும் சோதனை நிறைவடைந்தது.

இதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் 17 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது. சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்தனர். இந்த சூழலில் அமைச்சரின் இல்லத்திற்கு வழக்கறிஞர்கள், திமுக தொண்டர்கள் திரண்டு வந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.

இந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நெஞ்சுவலியில் அமைச்சர் செந்தில்பாலாஜி கண்ணீர் விட்டு கதறினார். இதனைத்தொடர்ந்து சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவரது வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, "அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. காரணம் எதுவும் சொல்லாமல் அவரை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

உறவினர்கள், நண்பர்கள் யாரிடமும் அதிகாரிகள் எதுவும் சொல்லவில்லை. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

கைது நடவடிக்கை என்றால் அதற்குரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எந்த வழக்குக்காக விசாரணை நடத்தப்பட்டது என்பது தொடர்பாக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம்" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்