ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற 8 வாரத்தில் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓடை புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-09-18 18:41 GMT


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓடை புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ஓடைகள் ஆக்கிரமிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகா, பசுவந்தனை பகுதியை சேர்ந்த அய்யாச்சாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

பசுவந்தனை கிராமப்பகுதியின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. இங்குள்ள கைலாசநாதர் கண்மாய்க்கு 3 ஓடைகள் மூலம் தண்ணீர் வரத்து உள்ளது. இந்த கண்மாயில் சேமிக்கப்படும் தண்ணீர் மூலம் சுமார் 400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அதுமட்டுமல்லாமல் இந்த கண்மாய் தண்ணீர்தான் பசுவந்தனை கிராம மக்கள் குடிநீர் ஆதாரமாகும். இந்த ஓடைகளின் மூலம்தான் சில்லன்குளம், கப்பிகுளம், தெற்கு கைலாசபுரம், மீனாட்சிபுரம், துரைசாமிபுரம் ஆகிய கிராமங்களின் விவசாயம் நடக்கிறது.

இந்தநிலையில் இதே பகுதியில் ஏராளமான காற்றாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த காற்றாலைகளுக்கு பல்வேறு பொருட்களை ஏற்றிக்கொண்டு, கனரக வாகனங்கள் வருகின்றன. இந்த வாகனங்கள் செல்வதற்காக இங்குள்ள ஓடை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து சிமெண்டு குழாய்கள் அமைத்து பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.

உறுதியான நடவடிக்கை

இதனால் மழை நேரங்களில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர், பசுவந்தனை கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கண்மாய்க்கு தடையின்றி செல்ல முடியாமல், விவசாய நிலங்களில் தேங்கி, பயிர்களை அழிக்கின்றன. நீர் வரத்து இன்றி கைலாசநாதர் கண்மாய் வறண்டு கிடக்கிறது.

இதுகுறித்து ஏற்கனவே மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டோம். எங்கள் கோரிக்கை தொடர்பாக கூட்டம் நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிஅளித்தனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே காற்றாலை வாகனங்கள் செல்வதற்காக ஓடை புறம்போக்குகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட பாதையை அகற்ற உறுதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் சத்தியமூர்த்தி ஆஜராகி, பசுவந்தனை கிராமத்தில் உள்ள ஓடை புறம்போக்குகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக 2016-ம் ஆண்டிலேயே கலெக்டர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இதனால் ஏராளமான விவசாயிகளும், கிராம மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், 2016-ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப் படையில் பசுவந்தனை கிராம ஓடைகளை ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்டத்திற்கு உட்பட்டு அதிகாரிகள் 8 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்