ஆக்கிரமிப்பு வீடுகளில் மின்இணைப்பு துண்டிப்பு
ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளின் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. வீடுகளை இடிக்க காலஅவகாசம் கேட்கப்பட்டதால் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளின் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. வீடுகளை இடிக்க காலஅவகாசம் கேட்கப்பட்டதால் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
நடவடிக்கை
ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் பகுதி சத்யா நகரில் கடந்த பல ஆண்டுகளாக சுமார் 92 வீடுகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. நீர்நிலை புறம்போக்கு பகுதி என்பதால் இவர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் குடிசைமாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் போக்குவரத்து வசதி இல்லை என்றும் கூறி அங்கு செல்ல மறுத்து இந்த பகுதியினர் காலி செய்யாமல் இருந்து வருகின்றனர். இவர்களை அங்கிருந்து காலி செய்து நிலத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் சமயங்களில் அவர்களின் கோரிக்கையை கேட்டு சமாதான முயற்சி இதுவரை நடந்து வந்தது.
உத்தரவு
இதனால் இவர்கள் காலி செய்யாமல் பிடிவாதமாக இருந்து வந்தனர். இந்தநிலையில் ஐகோர்ட்டு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை அளிக்க உத்தரவிட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட அல்லிக்கண்மாய் பகுதி ஆக்கிரமிப்பு களை அகற்ற மீண்டும் நடவடிக்கை எடுத்து உள்ளது. இதன்படி இந்த பகுதியினரை காலி செய்ய வைக்கும் விதமாக முதலில் மின்இணைப்பை துண்டிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று காலை மின்வாரியத்தினர் மூலம் அதிகாரிகள் மின்இணைப்பினை துண்டிக்கும் நட வடிக்கையில் இறங்கி அனைத்து வீடுகளின் மின் இணைப்பை துண்டித்தனர்.
தொடர்ந்து ஆர்.டி.ஓ. சேக்மன்சூர் தலைமையில் தாசில்தார் முருகேசன், பொதுப்பணித்துறை பொறியாளர் ஜெயதுரை உள்ளிட்ட அதிகாரிகள் ஐகோர்ட்டு உத்தரவின்படி ஆக்கிரமிப்பு வீடுகளை போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணியில் இறங்கினர்.
சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகள், மாட்டுக்கொட்டைகள், கூரைசெட்டுகள் போன்றவற்றை இடித்து தரைமட்ட மாக்கினர். அப்போது அந்த பகுதியினர் பொருட்களை எடுக்க காலஅவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
பாதுகாப்பு
இதனை தொடர்ந்து அதிகாரிகள் வருகிற 15-ந் தேதிக்குள் காலி செய்துவிட வேண்டும் என்றும் இனி அவகாசம் கொடுக்க முடியாது என்றும் திட்டவட்டமாக கூறி சென்றனர். இந்தநிலையில் ஆக்கிரமிப்பை அகற்றும்முன் பிரச்சினைக்கு உரியவர்கள் என்று கருதுவதாக கூறி சிலரை போலீசார் வாகனத்தில் ஏற்றி போலீஸ் பாதுகாப்புடன் வைத்திருந்தனர். இதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களை சிறை பிடித்து வைத்துக்கொண்டால் தங்களின் வீடுகளில் உள்ள பொருட்களை எப்படி எடுப்பது என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.