சூரப்பள்ளம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்

பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2023-08-31 20:39 GMT

கரம்பயம்:

பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சூரப்பள்ளம் ஏரி

பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் ஊராட்சியில் 160 ஏக்கர் நிலப்பரப்பில் சூரப்பள்ளம் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் சூரப்பள்ளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மழை காலத்தில் ஏற்படும் வெள்ளம் நசுவினி காட்டாற்றில் 3 கிலோமீட்டர் தூரம் வந்து, சூரப்பள்ளம் ஏரியில் சேரும். இந்த ஏரி நிரம்பியதும், 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட புரவாரை நிலங்கள் பாசன வசதி பெறும். இதை தொடர்ந்து 120-க்கும் மேற்பட்ட ஏக்கர் கரம்பை நிலங்கள் பாசன வசதி பெறும்.

தூர்ந்து மண்மேடாக உள்ளது

பாசன வசதி பெற்றது போக மீதி உள்ள நீர் ஏரி உடைந்து விடாமல் இருக்க கழுங்கு பாதை வழியாக மீண்டும் நசுவினி காட்டாற்றுக்கு நீர் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சூரப்பள்ளம் ஏரி தூர்ந்து மண் மேடாக காணப்படுகிறது.

இதனால் இந்த ஏரியில் தண்ணீர் குறைந்த அளவு உள்ளது. இந்த ஏரி மூலம் பாசன வசதி பெறும் விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்லாததால் பயிர்கள் கருகி வருகின்றன.

தூர்வார வேண்டும்

இந்த ஏரிக்கு தண்ணீர் செல்லும் வழிபாதையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு சூரப்பள்ளம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார முழுமையாக தண்ணீர் நிரப்ப வேண்டும் என சூரப்பள்ளம் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்