ஆவடி, சிவகங்கையில் நாளை வேலைவாய்ப்பு நிகழ்ச்சி: பணி நியமன ஆணைகளை வழங்கும் மத்திய மந்திரிகள்

ஆவடி மற்றும் சிவகங்கையில் நாளை நடைபெறும் வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளனர்.

Update: 2023-08-27 16:52 GMT

சென்னை,

ஆவடி மற்றும் சிவகங்கையில் நாளை நடைபெறும் வேலைவாய்ப்புத் திருவிழாவில் மத்திய மந்திரிகள் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் பிரதமர் மோடி முன்னுரிமை அளித்து வருகிறார். அதன் அடிப்படையில் மத்திய அரசு இந்தாண்டு இறுதிக்குள் பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க இலக்கு நிர்ணயித்து செயல்படுத்தி வருகிறது.

மத்திய அரசு பிற மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மேளாக்களை ஏற்பாடு செய்து ஒவ்வொரு மாதமும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கி வருகிறது. வேலைவாய்ப்பு மேளாவின் அடுத்த நிகழ்ச்சி நாளை ஆகஸ்ட் 28, 2023 அன்று நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் ஆவடியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி நாராயணசாமி மற்றும் சிவகங்கையில் நடைபெறும் வேலை வாய்ப்பு திருவிழாவில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை மந்திரி ஷோபா கரண்ட்லஜே ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளனர்.

இம்முறை உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய ஆயுதக் காவல் படையின் பல்வேறு பிரிவுகளான மத்திய ரிசர்வ் காவல் படை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, எல்லைக் காவல் படை, இந்தோ திபெத் காவல் படை, சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி), அசாம் ரைபிள்ஸ், போதைப்பொருள் தடுப்பு பணியகம் (என்சிபி) மற்றும் டெல்லி காவல்துறை போன்ற பல்வேறு மத்திய ஆயுதக் காவல் படைகளிலும் இதர துறைகளிலும் புதிதாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் இந்நிகழ்வில் தங்களது பணி நியமன ஆணைகளைப் பெற உள்ளனர்.

நமது மக்கள்தொகை, நாட்டின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாகும் என்று பிரதமர் எப்போதும் கூறி வருகிறார், அதன்படி விக்சித் பாரத் என்ற இலக்கை அடைவதற்காக தேசத்தைக் கட்டமைப்பதில் இளைஞர்களின் திறமை முழுமையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக அரசு துரிதமாக ஆட்சேர்ப்பைத் தொடங்கி செயல்படுத்தி வருகிறது.

நாட்டிலுள்ள பல்வேறு அரசுத் துறைகளில் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு உறுதியான நடவடிக்கையாக வேலைவாய்ப்பு திருவிழா உள்ளது. இந்த வேலைவாய்ப்பு திருவிழாக்கள் நாட்டில் மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஊக்கியாக செயல்படும் என்றும், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அவர்களின் அதிகாரமளித்தல் மற்றும் தேசத்தைக் கட்டமைப்பதில் நேரடி பங்கேற்பிற்காக சிறந்த தொழில் வாய்ப்புகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிஏபிஎப் மற்றும் டெல்லி காவல்துறையை வலுப்படுத்துவது, நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பது, கிளர்ச்சியை எதிர்த்துப் போராடுவதில் உள்நாட்டு பாதுகாப்புக்கு உதவுவது, இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக மற்றும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது போன்ற பல பரிமாணப் பங்கை இந்தப் படைகள் மிகவும் திறம்பட செய்ய உதவும். இப்படைகளில் புதிய ஆட்சேர்ப்பு எல்லைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பாதுகாப்பு உணர்வை மேம்படுத்தவும் உதவும் எல்லை தாண்டிய குற்றங்கள், கடத்தலைத் தடுக்கவும் அவை மேலும் உதவும்.

மத்திய அரசுப் பணிகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் நன்மைக்காக கர்மயோகி பிராரம்ப் என்ற தளத்தில் பல்வேறு பயிற்சி மற்றும் இணையவழிக் கற்றல் பாடங்கள் வழங்கப்படுகின்றன" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்