நாடு முழுவதும் 75 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்: சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் 255 பேருக்கு பணி நியமன ஆணைகள்
நாடு முழுவதும் 75 இடங்களில் வேலைவாய்ப்பு முகாமை மத்திய அரசு நேற்று நடத்தியது. இதில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் 255 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார்.
வேலைவாய்ப்பு முகாம்
மத்திய அரசாங்கத்தின் அனைத்து துறைகளிலும் அடுத்த 1½ ஆண்டுகளில் 10 லட்சம் பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட இருப்பதாக கடந்த ஜூன் மாதத்தில் பிரதமர் மோடி அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 75 இடங்களில் 75 ஆயிரத்து 266 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் 'ரோஸ்கர் மேளா 2022' என்ற பெயரிலான முதற்கட்ட வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடத்தப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அதன்படி, தமிழகத்தில் சென்னை, கோவையில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. சென்னை அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள அம்பேத்கர் அரங்கத்தில் நேற்று நடந்த இந்த முகாமுக்கு, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். இதில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்யா, ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்.) பொது மேலாளர் ஏ.கே.அகர்வால், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா, சுங்கம் மற்றும் மறைமுக வரிகள் வாரியத்தின் தலைவர் விவேக்ஜோஹ்ரி, தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை பணியாளர் அதிகாரி கே.ஹரிகிருஷ்ணன், சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் கணேஷ் உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் வரும் அனைத்து துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
இதில் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகள் பெற வந்தவர்களிடம், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார்.
அந்தவகையில் உதவி லோகோ பைலட்டாக தேர்வான திருத்தணியை சேர்ந்த உமா, கடலோர காவல்படையில் டிரைவர் பணி கிடைத்த நீலகிரியை சேர்ந்த வெள்ளியங்கிரி, தபால்துறையில் பணி ஆணை பெற்ற ஆவடியை சேர்ந்த கேசவன், இந்தியன் வங்கியில் பாதுகாப்பு அலுவலர் பணி பெற்ற நெல்லையை சேர்ந்த மதன், கனரா வங்கியில் பணி கிடைத்த சென்னையை சேர்ந்த ராஜேஸ்வரி, கடலோர காவல்படையில் தட்டச்சர் பணிக்கு தேர்வான உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அகிலா யாதவ், பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் பணி கிடைத்த சென்னையை சேர்ந்த மோனிகா ஆகியோரிடம் நேரில் சென்று சகஜமாக பேசினார்.
255 பேருக்கு பணி ஆணைகள்
அதனைத்தொடர்ந்து 255 பேருக்கு மத்திய அரசின் துறைகளில் உள்ள பணியிடங்களில் சேருவதற்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் 25 பேருக்கு மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேரடியாக வழங்கினார். மற்ற 230 பேருக்கு அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளால் வழங்கப்பட்டன.
இதில் அதிகபட்சமாக தெற்கு ரெயில்வே துறையின் கீழ்வரும் (சென்னை, திருச்சி கோட்டங்கள்) பணிகளில் 85 இடங்களும், அதற்கு அடுத்தபடியாக கடலோர காவல்படையில் 52 பணியிடங்களும், பணியாளர் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் (இ.எஸ்.ஐ.சி.) 25 பணியிடங்களும், சுங்கம் மற்றும் ஜி.எஸ்.டி.யில் 18 பணியிடங்களும், இந்தியன் வங்கியில் 17 பணியிடங்களும், வருமான வரித்துறையில் 15 பணியிடங்களும், சி.ஆர்.பி.எப்.பில் 10 பணியிடங்களும், இஸ்ரோ, தபால்துறை, எஸ்.எஸ்.பி., சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, சி.ஐ.எஸ்.எப். ஆகியவற்றில் தலா ஒரு இலக்கம் கொண்ட பணியிடங்களும் என மொத்தம் 255 இடங்கள் நிரப்பப்பட்டு இருக்கின்றன.
இந்த 255 பணியிடங்களில் 85 சதவீதம் இடங்களில் தமிழர்களே இடம்பெற்றிருக்கின்றனர். மீதமுள்ள பணியிடங்களில் ஆந்திரா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும் உள்ளனர்.
'தமிழிலேயே பேசுங்கள்' என கூறிய நிர்மலா சீதாராமன்
நிகழ்ச்சியில் வருமான வரித்துறையில் ஆய்வாளர் பணி கிடைத்த நெல்லை முகமது ஷகில் என்பவர் பேசும்போது, முதலில் ஆங்கிலத்தில் தன்னை அறிமுகப்படுத்தினார். அப்போது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர் என்று கேட்டார். அதற்கு நெல்லை என்று முகமது ஷகில் கூறினார். உடனே நிர்மலா சீதாராமன், நீங்கள் தமிழிலேயே பேசுங்கள் என்றார்.
இதேபோல், கடலோர காவல்படையில் பணி ஆணை பெற்ற சென்னையை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவர், முதலில் ஆங்கிலத்தில் பேசத்தொடங்கி, பின்னர் தமிழில் நான் பேசலாமா? என்று மத்திய மந்திரியிடம் கேட்டார். அதற்கு அவர், 'சந்தோஷமாக நன்றாக தமிழில் பேசுங்கள்' என்று கூறினார்.