ஊதிய உயர்வு கோரி எரிவாயு தொழிற்சாலையில் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் கோரி எரிவாயு தொழிற்சாலையில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் இந்தியன் ஆயில் பெட்ரோனஸ் என்ற எரிவாயு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் உள்ள ராட்சத சேமிப்பு கிணறு மூலம் எரிவாயு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் ராட்சத லாரிகளில் நிரப்பி கொண்டு எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பும் கம்பெனிகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் 49 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர் 3 ஷிப்டுகளில் 250-க்கும் மேற்பட்ட லாரிகளில் எரிவாயு நிரப்புகின்றனர். இவர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வரும் நிலையில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று எரிவாயு நிரப்பும் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் எரிவாயு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் எரிவாயு சிலிண்டர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவானது. இதனைத்தொடர்ந்து தகவலறிந்த பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் செய்ய நிறுவன அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து 3 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர். ஆங்காங்கே நிறுத்தப்பட்டு லாரிகள் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலைக்கு வரத் தொடங்கியது.