ரெயில்வே கேட் திடீர் பழுது; வாகன ஓட்டிகள் கடும் அவதி
நாகர்கோவில் அருகே குலசேகரன்புதூர் ரெயில்வே கேட் திடீரென பழுதானதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதனால் அந்த பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் அருகே குலசேகரன்புதூர் ரெயில்வே கேட் திடீரென பழுதானதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதனால் அந்த பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரெயில்வே கேட் பழுது
நாகர்கோவில் வெள்ளமடம் அருகே உள்ள குலசேகரன்புதூர் பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. ரெயில் வரும் போது அந்த கேட்டை மூடும் போது சில சமயம் திறக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சரக்கு ரெயில் ஒன்று சென்றது. இதற்காக குலசேகரன்புதூர் ரெயில்வே கேட் மூடப்பட்டது. ரெயில் சென்றதும் ஊழியர் ரெயில்வே கேட்டை திறக்க முயற்சித்தார்.
ஆனால் கேட் பழுதாகி திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஊழியர் எவ்வளவு முயற்சி செய்தும் ரெயில்வே கேட்டை திறக்க முடியவில்லை. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியவில்லை.
நீண்ட நேரமாகியும் கேட் திறக்கப்படாததால் மாணவர்கள் சிலர் வாகனங்களில் இருந்து இறங்கி பள்ளி, கல்லூரிக்கு நடந்தே சென்றனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் கேட்டில் ஏற்பட்ட பழுதை போராடி சரி செய்தனர். பின்னர் ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.