மின்சார ரெயில்கள் ரத்து: நாளை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் சேவை
பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மாலை வரை மின்சார ரெயில் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அனைத்து பயணிகளும் தங்களின் பயணங்களை அதற்கேற்ப திட்டமிடுமாறு மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.