ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் இளங்கோவன் அமோக வெற்றி பெறுவார்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இளங்கோவன் வெற்றி பெறுவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.

Update: 2023-01-24 19:10 GMT

நெய்வேலி, 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியலமைப்பை பாதுகாப்போம் கையோடு கைகோர்ப்போம் என்ற தலைப்பில் மண்டல அளவிலான நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகரில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசகுமார் வரவேற்புரை ஆற்றினார். கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் என்.வி.செந்தில் நாதன், கடலூர் மத்திய மாவட்ட தலைவர் திலகர், விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் சுரேஷ் எம்.பி. திருவள்ளூர் தொகுதி எம்.பி. ஜெயக்குமார், ஊடகப்பிரிவு மாநில தலைவர் கோபண்ணா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில், மாநில செயலாளர்கள் சித்தார்த்தன், சேரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் காங்கிரஸ் குமார், கடலூர் மாமன்ற கவுன்சிலர் சரஸ்வதி வேலுசாமி, டாக்டர் செந்தில் வேலன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டார, நகர தலைவர்கள், மகிளா காங்கிரஸ் தலைவர்கள், ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் விளைவாக இன்றைக்கு கையோடு கை கோர்ப்போம் என்ற திட்டத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம். ஏற்கனவே ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 100 இடங்களில் காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றுவது என்ற முறையோடு தொடங்கி இருக்கிறோம். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவித்திருக்கிறது. எங்களுடைய கூட்டணி கட்சி தலைமையான தி.மு.க. எங்களை அழைத்து இது உங்கள் இடம். நீங்களே போட்டியிட வேண்டும் என்று பெருந்தன்மையோடு கூறியுள்ளது.

துணிவை பாராட்டுவோம்

அ.தி.மு.க. கூட்டணியில் இந்த நிமிடம் வரை யார் நிற்கப் போகிறார் என்றே தெரியவில்லை. அ.தி.மு.க.வில் நான்கு பிரிவுகளும் நாங்கள் நிற்போம் என்று சொல்லுகிறார்கள். பாஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் ஈரோட்டில் இளங்கோவனை எதிர்த்து நிற்கட்டும். அப்படி அவர் நின்றால் அவருடைய துணிவை பாராட்டுவோம். பா.ஜ.க. தான் பெரிய கட்சி தனித்து நிற்போம் என்று சொன்னவர் தேர்தல் வந்தவுடன் அ.தி.மு.க. தான் பெரிய கட்சி என்று சொல்கிறார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் எங்களுடைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களத்தில் உள்ளார். ஆனால் களத்தில் எதிரிகளையே காணோம். எனவே இடைத்தேர்தலில் இளங்கோவன் அமோக வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்