மறுசீரமைப்பு பணிகள் காரணமாக எழும்பூர் வடக்கு பஸ் நிலையம் இன்று முதல் மாற்றம்

எழும்பூர் வடக்கு பஸ் நிலையம் வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செல்லும் மாநகர பஸ்கள் அனைத்தும், இன்று முதல் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் முன்பு நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லும் என மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

Update: 2023-12-23 22:45 GMT

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம், கட்டிடக்கலைகளுக்கு எடுத்துக்காட்டாக, நூறு ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. நாள்தோறும் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கும், வடமாநிலங்களுக்கும் ரெயில்சேவைகள் விறுவிறுப்பாக நடைபெறும் இந்த ரெயில் நிலையத்தை, மேலும் மேம்படுத்தும் வகையில் ரூ.734 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பொதுவாக, தென்மாவட்டங்களில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அரசு மாநகர போக்குவரத்து சேவையையும், சென்னை மெட்ரோ ரெயில் சேவையையும் அதிகளவு பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், எழும்பூரில் வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு பஸ் நிலையங்கள் உள்ளன. இதில், எழும்பூர் வடக்கு பஸ் நிலையத்துக்கு சென்னை திருவொற்றியூர், பிராட்வே உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகர பஸ்கள் வருகை தருகின்றன. இந்த பஸ்கள் வடக்கு பஸ் நிலையம் வழியாக மற்ற பகுதிகளை சென்றடைகின்றன.

தற்போது, தெற்கு ரெயில்வே நிர்வாகம் எழும்பூர் வடக்கு பஸ் நிலையம் பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்க இருப்பதால் எழும்பூர் வடக்கு பஸ் நிலையம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் வேறு இடத்துக்கு மாற்றப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எழும்பூர் வடக்கு பஸ் நிலையம் வழியாக செல்லக்கூடிய 15, 15பி, 15சி, 15 எப், 15ஜி, 20, 20ஏ, 20 டி, 101, 101எக்ஸ், 53, 71, 120 ஏ, 120 இ, 120 கே, 150 உள்பட பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செல்லும் மாநகர பஸ்கள் அனைத்தும், இன்று முதல் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் முன்பு நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லும் என மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இங்கு புதிய பஸ் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு பஸ் நிலையத்தை கடைசி நிறுத்தமாக கொண்டுள்ள 28, 28ஏ, 28பி ஆகிய வழித்தட பஸ்கள், மணியம்மை சிலை அருகே நிறுத்தி வைக்க மாநகர போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்