கத்தரிக்காய் அறுவடை பணி மும்முரம்

கடலூர் அருகே கத்தரிக்காய் அறுவடை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2023-05-13 18:45 GMT

கடலூர் அருகே உள்ள உச்சிமேடு, நாணமேடு உள்ளிட்ட பகுதி மக்களில் பெரும்பாலானோருக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். இப்பகுதியில் விளைவிக்கப்படும் சின்ன வெங்காயம் மற்றும் நாணமேடு கத்தரிக்காய் தனிச்சுவை நிறைந்ததாகும். இதனால் இப்பகுதியில் அதிகளவில் சின்னவெங்காயம் மற்றும் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் குறுகிய கால பயிரான சாமந்தி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூ வகை பயிர்களும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நாணமேடு பகுதி விவசாயிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கத்தரி சாகுபடி செய்தனர். பின்னர் அவற்றுக்கு உரமிட்டு, களை எடுத்து பராமரித்து வந்த நிலையில் தற்போது விளைந்து அறுவடைக்கு தயாராகி உள்ளது. இதனால் தொழிலாளர்கள் கத்தரிக்காய் அறுவடை பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மகசூல் பாதிப்பு

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் கத்தரிக்காயில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மகசூல் பாதிப்பு பாதிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து நாணமேடு பகுதி விவசாயிகள் கூறுகையில், தற்போது கத்தரிக்காய் வரத்து அதிகரித்து இருப்பதால், குறைந்த விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

அதாவது கடலூரில் ஒரு கிலோ ரூ.20-க்கும், அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் ஒரு கிலோ ரூ.30-க்கும் விற்பனையாகிறது. சில நேரத்தில் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றால் வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர். இதனால் கத்தரிக்காய் வீணாகி விடுகிறது. கத்தரிசெடி நடவு செய்தல், தண்ணீர் பாய்ச்சுதல், களை எடுத்தல், உரம், பூச்சிமருந்து தெளித்தல், தொழிலாளர்கள் கூலி என கணக்கிட்டு பார்த்தால் விவசாயிகளுக்கு குறைந்தளவே லாபம் கிடைக்கிறது. மேலும் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் செடிகள் மற்றும் காய்களில் நோய் தாக்கியுள்ளது.

நடவடிக்கை

இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க எங்களது பயிர்களை வேளாண்அதிகாரிகள் பார்வையிட்டு நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்