கல்வி கற்றால்தான் சிறந்த நிலையை அடைய முடியும்; கலெக்டர் பேச்சு

கல்வி கற்றால்தான் சிறந்த நிலையை அடைய முடியும் என்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.

Update: 2023-10-17 18:02 GMT

கல்வி கற்றால்தான் சிறந்த நிலையை அடைய முடியும் என்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர் மாவட்டத்தில் அரசு மாதிரி பள்ளியில் மாணவர்கள் சேர்ந்து பயன்பெறும் வகையில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலூரில் நேற்று நடந்தது. ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் ராமச்சந்திரன், வேலூர் மாநகராட்சி துணை கமிஷனர் சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி வரவேற்றார்.

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் அரசு மாதிரி பள்ளி கடந்தாண்டு தொடங்கப்பட்டது. இங்கு பிளஸ்-2 படித்த மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இந்தாண்டு பிளஸ்-1 மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது பிளஸ்-2 படித்து வரும் மாணவர்கள் அவர்கள் விரும்பும் மேற்படிப்பு நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க உள்ளனர். அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்போது சட்டக்கல்லூரி, ஐ.ஐ.டி., எம்.ஐ.டி. என்ஜினீயரிங் மற்றும் கலைக்கல்லூரிகளில் படித்து வருகிறார்கள்.

கல்வி கற்றால்தான்...

வாழ்க்கையில் முன்னேற கல்வி முக்கியம். கல்வி கற்றால்தான் சிறந்த நிலையை அடைய முடியும்.

மாணவர்கள் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு உதவுவதற்காக தான் அரசு மாதிரி பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வில் சில பாடங்களில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அதனை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுயமாக சிந்திக்கும் திறன் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்

சூழ்நிலைக்கு ஏற்றார்போல் சிந்திக்கும் திறன் இருந்தால்தான் எந்த பிரச்சினையையும் கையாள முடியும்.

அரசு மாதிரி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு கல்லூரியில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். அரசு தரும் இந்த வாய்ப்பை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இதில் அரசு பள்ளி மாணவர்கள், அவர்களின் பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்