அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் வருகை பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் வருகிறார். அவருக்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.;
சேலம்,
எடப்பாடி பழனிசாமி
சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ந்த நிலையில் அவர் தனது சொந்த மாவட்டமான சேலத்துக்கு முதன்முதலாக இன்று (வெள்ளிக்கிழமை) வருகிறார். இதையொட்டி அவருக்கு சேலம் மாவட்டத்தில் பல இடங்களில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க அ.தி.மு.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து இன்று காலை சாலை மார்க்கமாக காரில் புறப்படும் எடப்பாடி பழனிசாமி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி வழியாக சேலம் மாவட்டத்திற்கு வருகிறார். மாவட்ட எல்லையான தலைவாசலுக்கு காலை 11.30 மணியளவில் வரும் அவருக்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. தலைவாசல் பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவச்சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
அங்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களிடம் வரவேற்பை பெறும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து ஆத்தூர் வழியாக சேலம் மாநகருக்கு வருகிறார்.
பிரமாண்ட வரவேற்பு
சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதியம் 12.30 மணிக்கு திருவாக்கவுண்டனூர் பகுதிக்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.
மேலும், அங்கு அவர் பேசுவதற்காக மேடை அமைக்கப்பட்டுள்ளது. அப்போது, கட்சியினர் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவாசல் முதல் சேலம் வரைக்கும் வழிநெடுகிலும் அவருக்கு அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.