ஜிஎஸ்டி வரி உயர்வை உடனடியாக நீக்க வேண்டும் - மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி உயர்வை உடனடியாக நீக்க வேண்டும் என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-07-20 07:24 GMT

சென்னை,

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஜி.எஸ்.டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பல பொருட்கள் வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏழை, எளிய மற்றும் நடுத்தர வகுப்பு மக்கள், சாமான்ய மக்கள் உட்பட அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் பல அத்தியாவசியப் பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது.

பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை மற்றும் அரிசி மாவு, கோதுமை மாவு, பருப்பு, பன்னீர், தேன், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், உலர் பழங்கள், காய்கறிகள், நாட்டுச் சர்க்கரை, பொரி, இறைச்சி உட்பட பல உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அஞ்சலக சேவைகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட பொருட்களின் விலைகள் தாருமாறாக உயரும் என்ற காரணத்தால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர வகுப்பு மக்கள் குறிப்பாக தாய்மார்கள் இந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இந்த வரி விதிப்பினால், உணவகங்களில் அனைத்து உணவு வகைகளின் விலைகளையும் உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவகங்களை நம்பி இருக்கும் நடுத்தர வருவாய் பிரிவு மக்கள் மட்டுமல்ல, சிறு உணவகங்கள் நடத்தி வருபவர்களும், அதில் பணிபுரிபவர்களும் இந்த வரி விதிப்பினால் ஏற்படும் தொழில் பாதிப்பை எண்ணி கவலை அடைந்துள்ளனர்.

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் தினசரி வாழ்க்கையில் பெரும் சுமையை ஏற்படுத்தும் இந்த வரி விதிப்பை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு, விடியா திமுக அரசின் சார்பில் அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்