அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடந்து முடிந்துள்ள நிலையில், மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர். அரசியல் கட்சிகளை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசுவும், தே.மு.தி.க. சார்பில் ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதனும் போட்டியிடுகின்றனர்.
77 பேர் போட்டியிட்டாலும், காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்கள் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24, 25-ந்தேதிகளில் 2 நாள் தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார். அ.தி.மு.க.வும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 15, 16, 17, 24, 25 ஆகிய தேதிகளில் 5 நாட்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். மொத்தம் 19 இடங்களில் அவர் பேசுகிறார்.
இவ்வாறாக ஈரோடு கிழக்கில் தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டதில் செங்கோட்டையன் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் இந்த ஆலோசனை நடைபெற்றது.