கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் திமுக அரசைக் கண்டித்து, உண்ணாவிரதப் போராட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-26 11:52 GMT

சென்னை,

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் தமிழக முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க வேண்டி, பல ஆண்டுகால கோரிக்கையை எனது தலைமையிலான ஜெயலலிதா அரசு கனிவுடன் ஆய்வு செய்து, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், கூனிமேடு கிராமத்தில் இருந்து தினமும் 60 MLD கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைத்து, அதன்மூலம் விழுப்புரம் நகராட்சி, திண்டிவனம் நகராட்சி, விக்கிரவாண்டி பேரூராட்சி, மரக்காணம் பேரூராட்சி மற்றும் மரக்காணம், வானூர், மைலம், விக்கிரவாண்டி, காணை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 692 கிராம குடியிருப்புகளுக்கும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் மற்றும் திண்டிவனம் SIPCOT-க்கும், தினந்தோறும் கடல் நீரை குடிநீராக்கி வழங்கும் 1502.72 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டப்பட்டு, ஆரம்ப கட்டப் பணிகள் துவக்கப்பட்டன.

ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த செயல்படாத திமுக அரசு, மக்களின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்ற அக்கறை சிறிதளவும் இல்லாமல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசால் தொடங்கப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்திட்டத்தை தற்பொழுது கைவிட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய விவசாயிகள் நிறைந்த மாவட்டங்களாகும். ஏற்கெனவே, இந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட அம்மா பல்கலைக்கழத்தை மூடியதன் மூலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பை திமுக அரசு பறித்தது. இப்பொழுது, இந்த செயல்படாத, நிர்வாகத் திறமையற்ற திமுக அரசு ஏழை, எளிய மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைப்பதையும் பறித்துள்ளது.

ஜெயலலிதா அரசால் அடிக்கல் நாட்டப்பட்ட, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டும் என்றும்; இதற்குத் தேவையான நிதியினை உடனடியாக விடுவித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், எம்.பி தலைமையில் 27.08.2022 - சனிக் கிழமை காலை 9 மணிமுதல், திண்டிவனம் காந்தி சிலை அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதே போல், மகளிர் உள்ளிட்ட பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்