தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிவடைந்த நிலையில் இதுவரை எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள், நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார்.
அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி கொண்டிருக்கிறார். இதுதான் ஓராண்டு கால சாதனை. இந்தியாவிலேயே முதன்மையான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கூறிக்கொள்கிறார்கள்.
கஞ்சா விற்பனை அமோகம்
ஊழல் செய்வதிலும், லஞ்ச லாவண்யம் பெறுவதிலும் தி.மு.க. அரசு முதன்மையாக விளங்கி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கிராமத்தில் இருந்து நகரம் வரை கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதில்தான் தி.மு.க. அரசு சாதனை படைத்து இருக்கிறது.
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுடன் தி.மு.க. கூட்டு வைத்துக்கொண்டு செயல்படுகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. தனி சட்டத்தை கொண்டு வந்து தி.மு.க. அரசு தடை செய்ய வேண்டும்.
சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.
மாநில அரசுக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. இவற்றை பிரதமரிடம் எடுத்துக்கூற ஏராளமான வழிமுறை உள்ளது. இதைவிடுத்து சட்டமன்றத்தில் பேசுவது போன்று அரசு நிகழ்ச்சியில் பேசுவது சரியாக இருக்காது என நினைக்கிறேன்.
இதற்கு பதிலாக அறிக்கையாக கொடுத்திருந்தால் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி பிரதமர் நடவடிக்கை எடுத்திருப்பார்.
பிரதமரிடம் வேண்டுகோள்
நூல் விலை உயர்வால் விசைத்தறி, கைத்தறி இயங்க முடியவில்லை. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நூல் விலை உயர்வை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று பிரதமர் சென்னை வந்த போது கேட்டுக்கொண்டேன்.
அதேபோன்று காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.