அ.தி.மு.க. ஆட்சியில் டெங்குவை கட்டுப்படுத்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி

அ.தி.மு.க. ஆட்சியில் டெங்குவை கட்டுப்படுத்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.

Update: 2023-09-30 11:33 GMT

சென்னை,

டெங்கு போன்ற விஷக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டி எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில், சுகாதாரத்துறையை கையில் வைத்துள்ள அமைச்சரின் மெத்தனப் போக்காலும், துறை பற்றிய புரிதல் இல்லாததாலும் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இனிமேலாவது தி.மு.க. அரசு விழித்துக்கொண்டு அப்பாவி மக்களின் உயிரைக் காக்க சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் டெங்குவை கட்டுப்படுத்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;-

"கடந்த 2012-ம் ஆண்டு தமிழகத்தில் அதிகபட்சமாக டெங்கு பாதிப்பால் 66 பேர் உயிரிழந்தனர். அதேபோல், 2017-ம் ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 23,294 டெங்கு பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டன. இந்த இரண்டும் யாருடைய ஆட்சிக்காலத்தில் நடந்தது என்பதை எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துகொள்ளட்டும்.

அ.தி.மு.க. ஆட்சியில் டெங்குவை கட்டுப்படுத்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை. ஆனால் இப்போது தமிழக அரசுக்கு ஆலோசனை சொல்கிறார். அவரது ஆலோசனைக்கு நன்றி.

தமிழகத்தில் தினமும் ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளோம். இது தொடர்பான செய்தி கடந்த ஒரு வார காலமாக அனைத்து ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் வந்துள்ளது. அதைப் பார்க்காமல் மருத்துவ முகாம் நடத்த எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூறுகிறார். எதிர்கட்சி தலைவர் தனது இருப்பை உறுதி செய்வதற்கு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்." இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்