கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: பொதுமக்களுக்கு சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்
கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி காரணமாக பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி காரணமாக பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில்,
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். வரிசையில் நின்று பொருட்கள் வாங்க வேண்டும். வரிசையில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். கடை ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். பஸ்சில் பயணிக்கும்போது 2 முகக்கவசம் அணியவேண்டும். அலுவலக பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்றவேண்டும்.
கடைகளில் கை சுத்திகரிப்பான், வெப்பநிலை பரிசோதனை கருவிகள் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளுக்குள் அதிகப்படியான ஆட்களை அனுமதிக்க கூடாது. நோய்த்தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்றனர்.