பராமரிப்பு பணிகள் எதிரொலி:லோயர்கேம்ப் நிலையத்தில் மின்உற்பத்தி நிறுத்தம்

பராமரிப்பு பணி காரணமாக, லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

Update: 2023-04-01 18:45 GMT

பராமரிப்பு பணி

கூடலூர் அருகே லோயர்கேம்பில் நீர் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின்உற்பத்திக்காக இங்கு 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு ஜெனரேட்டர் மூலம் 45 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்

ஒரு ஜெனரேட்டருக்கு வினாடிக்கு 450 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும். இங்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவைப் பொறுத்து ஜெனரேட்டர்கள் இயக்கப்படுகின்றன. தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2-ம் போக நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் லோயர்கேம்ப், மின்உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி வீதம் குடிநீருக்கு மட்டும் இரைச்சல் பாலம் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

மின் உற்பத்தி நிறுத்தம்

இதன் காரணமாக லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும். அப்போது அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாது. மின்சார உற்பத்தியும் நிறுத்தி வைக்கப்படும்.

இதற்கிடையே நேற்று முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.35 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 73 கனஅடியாகவும் இருந்தது. அணையில் இருந்து தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக இரைச்சல் பாலம் வழியாக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை வரை 15.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்