உயர்மின் கோபுரங்களை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல பொதுமக்கள் கோரிக்கை
உப்பாறு ஓடை வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதை தவிர்த்து மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உப்பாறு ஓடை வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதை தவிர்த்து மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உப்பாறு ஓடை
குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை ஆகும். குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளின் வழியாகவே இந்த உப்பாறு ஓடை செல்கிறது. உப்பாறு ஓடையின் வழியாக தண்ணீர் செல்லும் போது குடிமங்கலம் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது.
இதன் காரணமாக விவசாயிகள் கிணற்றுப்பாசனம் மூலம் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். உப்பாறு ஓடை வழியாக செல்லும் தண்ணீர் கடைசியாக உப்பாறு அணையை சென்றடைகிறது. உப்பாறு அணை மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. இது தவிர ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.
மாற்றுப்பாதை
குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் பல இடங்களில் உப்பாறு ஓடை வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் உயர் மின் கோபுரங்களின் அடிப்பகுதி நீரில் மூழ்கி காணப்படுகிறது. மேலும் உப்பாறு ஓடை வழியாக செல்லும் குப்பைகள், கழிவுகள் மின் கோபுரங்களின் அடிப்பகுதியில் அடைத்துக் கொள்கின்றன. இதனால் பல இடங்களில் தண்ணீர் வீணாகி வருகிறது.
உயர்மின் கோபுரங்களில் பழுது ஏற்பட்டாலும் பராமரிப்பு பணிகள் செய்வது மிகவும் சிரமமாக உள்ளது. தண்ணீர் மின் கடத்தி என்பதால் சிறிய அளவில் மின் கசிவு ஏற்பட்டாலும் பெரிய அளவில் விபத்துக்களை உண்டாக்கும். எனவே உயர் மின் கோபுரங்களை உப்பாறு ஓடை வழியாக கொண்டு செல்வதை தவிர்த்து மாற்றுப்பாதை வழியாக கொண்டு செல்ல வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உப்பாறு ஓடையில் கழிவுகள், ஓடுகள் கொட்டப்படுவதால் ஓடை குப்பை மேடாகவும் காட்சியளிக்கிறது. இதனையும் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.