கிழக்கு கடற்கரை ரெயில் திட்ட பாதையை மாற்றக்கூடாது -அன்புமணி ராமதாஸ்
கிழக்கு கடற்கரை ரெயில் திட்டத்தின் பாதையை மாற்றக்கூடாது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
சென்னை பெருங்குடியில் தொடங்கி மாமல்லபுரம், கல்பாக்கம், புதுச்சேரி வழியாக கடலூருக்கு ரெயில் பாதை அமைப்பது தான் 2007-ம் ஆண்டில் தீட்டப்பட்ட திட்டம். இந்தத்திட்டத்துக்குத்தான் அப்போதைய மத்திய திட்டக்குழு ஒப்புதல் அளித்தது. இதுதான் தமிழ்நாட்டுக்கு, குறிப்பாக சென்னையின் தென்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் திட்டம். ஆனால், இப்போது பெருங்குடிக்கு மாற்றாக செங்கல்பட்டு நகரில் இருந்து இந்தத்திட்டத்தை தொடங்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக, தெற்கு ரெயில்வே தரப்பில் கூறப்படும் காரணம், பெருங்குடி மற்றும் அதையொட்டிய கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைப்பகுதிகளில் நிலத்தின் மதிப்பு அதிகரித்துவிட்டது என்பதுதான். இந்த காரணம் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. பா.ம.க.வை சேர்ந்தவர்கள் ரெயில்வே இணை மந்திரியாக பதவி வகித்த காலத்தில் தான் கிழக்கு கடற்கரை ரெயில் பாதைக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 2007-ம் ஆண்டில் ரெயில்வே இணை மந்திரியாக அரங்க.வேலு இருந்தபோதுதான் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. சென்னையில் தொடங்கி கடலூர் வரை முழுக்க, முழுக்க வங்கக்கடலை ஒட்டிய பகுதிகள் வழியாக ரெயில் பாதை அமைப்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும்.
பாதிப்பு ஏற்படும்
கடலூருக்கு அப்பால் ஏற்கனவே கிழக்கு கடற்கரையை ஒட்டியுள்ள ரெயில் பாதையை இணைத்தும், புதிய பாதையை அமைத்தும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை ரெயில் பாதை அமைப்பது தான் அடுத்தக்கட்ட திட்டம். இந்தத்திட்டத்தை மாற்றி பெருங்குடிக்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து ரெயில் பாதை அமைக்கப்பட்டால் அது கிழக்குக்கடற்கரை ரெயில் பாதையாக இருக்காது. மற்ற திட்டங்களுக்கான செலவுகள் எல்லாம் அதிகரிக்காததை போலவும், இந்தத்திட்டத்துக்கான செலவு மட்டும்தான் அதிகரித்துவிட்டது போலவும் தோற்றத்தை ஏற்படுத்த ரெயில்வே முயல்வது நியாயமல்ல.
பெருங்குடிக்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து இந்தத்திட்டத்தை செயல்படுத்துவதால், பல பாதிப்புகள் ஏற்படக்கூடும். செங்கல்பட்டில் இருந்து இந்தத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னை மாநகர மக்களுக்கு எந்தப்பயனும் இல்லை. அவர்கள் இன்னொரு ரெயில் மூலம் செங்கல்பட்டுக்கு சென்று, அங்கிருந்து கிழக்குக்கடற்கரை ரெயில் பாதையில் புதுச்சேரிக்கோ, கடலூருக்கோ செல்வதைவிட, பஸ்சில் நேரடியாக சென்றுவிடமுடியும். அதுமட்டுமின்றி, சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடற்கரையை ஒட்டியே ரெயில் பாதை என்ற கனவு திட்டம் சிதைந்து விடும்.
அறிவிக்கவேண்டும்
பெருங்குடியில் இருந்து கிழக்கு கடற்கரை ரெயில் பாதை அமைப்பதற்கு திட்டச்செலவு சற்று அதிகரித்தாலும் கூட, அந்தப்பாதையில் திட்டத்தை செயல்படுத்துவதுதான் சரியானதாக இருக்கும். அதற்காக ஆகும் கூடுதல் செலவை, இந்தத்திட்டத்தை 16 ஆண்டுகள் தாமதப்படுத்தியதற்கான தண்டனையாக ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான். எனவே, சென்னை முதல் கடலூர் வரையிலான கிழக்கு கடற்கரை ரெயில் பாதை ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப்போல பெருங்குடியிலிருந்தே அமைக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.