விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மதுபோதையில் சீருடையில் இருந்த போலீஸ்காரர் பணிஇடைநீக்கம்
போலீஸ்காரர் பணிஇடைநீக்கம்
கொடுமுடி அருகே உள்ள பாசூரை சேர்ந்தவர் நல்லசாமி (வயது 32). இவர் கொடுமுடி போலீஸ் நிலையத்தில் 2-ம்நிலை காவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி அன்று கோபி சரகத்துக்கு உள்பட்ட கொளப்பலூர் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்துக்கு பாதுகாப்பு பணிக்காக நல்லசாமி சென்று இருந்தார்.
அப்போது அவர் போலீஸ் சீருடையில் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுவலூர் போலீசில் பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து நல்லசாமியை பணிஇடைநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார். இந்த சம்பவம் கொடுமுடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.