பாலாற்றில் திடக்கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்

பாலாற்றில் திடக்கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கூறியுள்ளார்.

Update: 2023-06-13 18:40 GMT

ஆய்வுக்கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் பாலாறு மாசடைதல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:-

மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் பாலாறு மாசடைவதை தடுக்க வேண்டும். வாணியம்பாடி நகராட்சியில் தினசரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திடக்கழிவுகள்பாலாற்றில் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். பாலாற்று நீரின் தரமானது மாசுக்கட்டுபாடு வாரியத்தின் தரத்திற்குள் இருக்க வேண்டும்.

வாணியம்பாடியில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து எந்தவிதமான நீரையும் வெளியேற்றம் செய்யாதவாறு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து நீர்நிலைகளை பாதுகாக்கப்பட வேண்டும்.

பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டும்

மேலும் திடக்கழிவுகளை தொழிற்சாலைகள், ஊராட்சிகள், நகராட்சிகள் வெளியேற்றாதவாறு கவனித்துகொள்ள வேண்டும்.

பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நமது மாவட்டத்தில் திடக்கழிவுகளை யாரும் தீவைத்து எரிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை திறம்பட செய்த வேர்கள் அறக்கட்டளை அமைப்புக்கு பசுமை சாம்பியன் விருது மற்றும் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் சண்முகம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, தாசில்தார் சாந்தி, நகராட்சி பொறியாளர் சங்கர், உதயேந்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் ரேவதி, உதவி பொறியாளர்கள் கேசவன் (தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்), சக்தி (நீர்வளத்துறை) உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்