தடுப்புச் சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் சாலையை சீரமைக்க கோரிக்கை

சாலையில் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து அபாயம் நிலவுகிறது. அதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-10-25 00:30 IST

சிங்கம்புணரி

நெடுஞ்சாலை

சிங்கம்புணரி பகுதியில் திண்டுக்கல்- காரைக்குடி நெடுஞ்சாலை பணிகள் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு நடைபெற்றது. நெடுஞ்சாலை பணி தொடங்குவதற்கு முன்பு சாலையின் இருபுறமும் கால்வாய்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. குறிப்பாக சிங்கம்புணரி எல்லை பகுதியான என்பீல்டுமேட்டு பகுதியில் இருந்து சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வரை 3 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்ட கால்வாய்கள் பல இடங்களில் நிறைவடையாமல் உள்ளது. குறிப்பாக சிங்கம்புணரி கால்நடை மருத்துவமனை, நீதிமன்றம் உள்ளிட்ட பல இடங்களில் கால்வாய்கள் முடிவடையாததால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு விபத்து அபாயம் உள்ளது. நெடுஞ்சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெடுஞ்சாலையின் மையபகுதியில் தடுப்பு சுவர் இல்லாததால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் நிலவுகிறது. சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

தடுப்பு சுவர்

இதுகுறித்து சமூக ஆர்வலர் தினேஷ் கூறுகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் திண்டுக்கல் காரைக்குடி சாலை விரிவுபடுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில் சாலை இருபுறமும் அமைக்கப்பட்ட கால்வாய்கள் முறையாக முடிக்கப்படாமல் ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்குவதுடன், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையை சீரமைப்பதுடன், கால்வாய்களை இணைத்து பொதுமக்களை பாதுகாக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலையின் இருபுறம் வாகனங்கள் நிறுத்தப்பட்டும், விளம்பர பலகைகள் வைத்தும் சர்வீஸ் சாலைகள் அடைக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் குறிப்பாக என்பீல்டு மேடு பகுதியில் இருந்து அய்யனார் கோவில் வரை தடுப்புசுவர் அமைக்கப்பட்டால் விபத்துக்களை தடுக்க முடியும். எனவே நெடுஞ்சாலை துறையினர் முடிவு பெறாத கால்வாய் பணிகளை சீரமைத்து, திண்டுக்கல்- காரைக்குடி நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்து விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்