வனத்துறையினர் தடையால்கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணி :பொதுமக்கள் அவதி

கடமலைக்குண்டு அருகே வனத்துறையினர் தடையால் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2023-05-18 18:45 GMT

வனத்துறையினா் தடை

கடமலைக்குண்டு அருகே வருசநாடு முதல் வாலிப்பாறை வரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட அளவிலான பகுதிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறி சாலை அமைக்கும் பணிக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். அதன்பின்னர் மாவட்ட அதிகாரிகள் வனத்துறையினருடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சாலை அமைக்க அனுமதி கிடைக்கவில்லை.

இதையடுத்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது. இதனால் சாலை அமைக்காத பகுதியில் வாகனங்கள் செல்ல மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரத்தில் மோட்டார்சைக்கிள் விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைத்தும் பொதுமக்களுக்கு பயன்பாடு இல்லாமல் காணப்படுகிறது.

சாலை அமைக்கும் பணி

இதற்கிடையே கடந்த மாதம் வருசநாடு பகுதியில் கனமழை பெய்தது. அதன்காரணமாக சாலை அமைக்கப்படாத பகுதி குண்டும், குழியுமாக மாறியது. எனவே தற்போது அந்தப் பகுதிகளில் ஆட்டோ, மினி வேன் உள்ளிட்ட சிறிய அளவிலான வாகனங்களை கூட இயக்க முடியவில்லை.

இதேபோல வனத்துறையினரின் தடை காரணமாக தாழையூத்து-கருமலைசாஸ்தாபுரம், காமராஜபுரம்-உரக்குண்டான்கேணி, சிதம்பரவிலக்கு-மண்ணூத்து உள்ளிட்ட ஏராளமான சாலைகள் அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வனத்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கடமலை-மயிலை ஒன்றியத்தில் விடுபட்ட பகுதிகளில் புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்