மக்காச்சோளம் விலை வீழ்ச்சியால்விவசாயிகள் கவலை
வடகாடு பகுதியில் மக்காச்சோளம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலைப்பட்டு வருகின்றனர்.
உற்பத்தி
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளம் உற்பத்தியில் அதிகப்படியான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு முழுவதும் கூட ஒரு சில விவசாயிகள் மக்காச்சோளத்தை பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.
ஒரு சில இடங்களில் ஓரளவுக்கு நல்ல முறையில் விளைச்சல் கண்டு இருந்தாலும் பல்வேறு இடங்களில் மக்காச்சோள தோட்டங்களில் `அமெரிக்கன் படைப்புழு' தாக்கமும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விலை வீழ்ச்சி
இங்கு உற்பத்தி ஆகும், மக்காச்சோளம் நூறு கிலோ கொண்ட மூட்டை ஒன்று ரூ.1,900 வரை விலை நிர்ணயம் செய்து வாங்கி சென்றனர். கடந்த மாதங்களில் மூட்டை ஒன்று ரூ.1,400 வரை விற்பனை ஆகி வந்த நிலையில், தற்போது, விற்பனை விலை வீழ்ச்சி கண்டு மூட்டை ஒன்றுக்கு ரூ.500 முதல் ரூ.600 வரை குறைந்து போய் உள்ளதாகவும் விவசாயிகள் வேதனைப்பட்டு வருகின்றனர்.
கோழித்தீவனம்
இப்பகுதிகளில் விளையும் மக்காச்சோளம் பெரும்பாலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தீவனத்திற்காகவும் மற்றும் பல்வேறு வகையான ஊட்டச்சத்து மாவுகள் மற்றும் கால்நடை தீவனத்திற்காகவும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பீகார் மாநிலத்தில் இருந்து மக்காச்சோளம் வரத்து அதிகரித்துள்ளதால் இத்தகைய விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.