சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை,
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை ஏர் ஏசியா பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது கம்போடியா நாட்டிலிருந்து மலேசியா வழியாக வந்த ஒரு பயணியை நிறுத்தி மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.
அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். மேலும் அந்தப் பயணி கம்போடியா நாட்டிலிருந்து, மலேசியா வழியாக சென்னைக்கு வந்துள்ளதால், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு. சந்தேகம் அதிகமானது. இதையடுத்து அவருடைய உடைமைகளை மத்திய அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அவருடைய பைக்குள் மறைத்து வைத்திருந்த பார்சல் ஒன்றை கண்டுபிடித்தனர்.
அந்தப் பார்சலை அதிகாரிகள் பிரித்துப் பார்த்தபோது, அதனுள் 3.5 கிலோ கொகைன் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மதிப்பு சுமார் ரூ.35 கோடி என்று கணக்கிடப்பட்டது. இதையடுத்து அந்த பயணியிடம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
போதை பொருளை யாரிடம் கொடுப்பதற்காக பயணி கடத்தி வந்தார்? சென்னைக்கு கடத்தி வரப்பட்ட காரணம் என்ன? போதைப்பொருளை கடத்தி வந்த பயணியின், பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்று பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணைகள் நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.