ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

Update: 2022-07-04 13:04 GMT

 ஷேர் ஆட்டோக்கள்

திண்டுக்கல் நந்தவனப்பட்டி, செட்டிநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தங்களின் வாகனங்களுடன் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், அவற்றை வரிசையாக நிறுத்திவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

வாழ்வாதாரம் பாதிப்பு

அப்போது அவர்கள் கூறுகையில், மேற்கண்ட பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிலை நம்பி, 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இந்த நிலையில் போக்குவரத்து போலீசார், விதிமுறைகளை கடைபிடிக்காததாக கூறி ஷேர் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2 ஆயிரத்து 500 வரை அபராதமாக விதிக்கின்றனர். இதற்கான பதிவு இணையதளம் மூலம் எங்களுக்கு கிடைக்கிறது. ஆனால் அதில் எந்த காரணத்துக்காக அபராதம் விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடப்படுவதில்லை.

ஒரு நாளைக்கு ஷேர் ஆட்டோ மூலம் எங்களுக்கு ரூ.500 முதல் ரூ.700 வரை தான் வருமானம் கிடைக்கும். அதனையும் அபராதம் விதித்து போலீசார் வசூலித்துவிடுகின்றனர். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் நாங்கள் குடும்பத்தினருடன் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை. எனவே காரணமின்றி அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் வலியுறுத்தினர்.

கலெக்டரிடம் கோரிக்கை

பின்னர் பிரச்சினை குறித்து கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி ஷேர் ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் அறிவுறுத்தினர். அதனை ஏற்று போராட்டத்தை கைவிட்ட டிரைவர்கள், கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்