ஆட்டோ மீது மாநகர பஸ் உரசியதால் பிராட்வே பஸ் நிலையத்தில் டிரைவர் மீது தாக்குதல் - சக ஊழியர்கள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு

ஆட்டோ மீது மாநகர பஸ் உரசியதால் ஆத்திரத்தில் பிராட்வே பஸ் நிலையத்தில் பஸ் டிரைவரை ஆட்டோ டிரைவர் மற்றும் சிலர் தாக்கினர். இதையடுத்து பிராட்வே பஸ் நிலையத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் பஸ்களை இயக்காமல் பஸ் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் குதித்தனர்.

Update: 2023-02-17 09:31 GMT

சென்னை அய்யப்பன்தாங்கலில் இருந்து பிராட்வேக்கு மாநகர பஸ் (தடம் எண் 26) இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை கணேசன் என்ற டிரைவர் நேற்று ஓட்டி வந்தார். பிராட்வே பஸ் நிலையத்துக்குள் பஸ் வந்த போது அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது உரசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் பார்த்தீபன் பஸ் டிரைவர் கணேசனை தாக்கினார். அவருக்கு ஆதரவாக சாலையோர கடை வியாபாரிகள் சிலரும் சேர்ந்து பஸ் டிரைவர் கணேசனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பஸ் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம் சக ஊழியர்களிடையே பரவியது. இதையடுத்து பிராட்வே பஸ் நிலையத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் பஸ்களை இயக்காமல் பஸ் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் குதித்தனர். இதனால் அரை மணி நேரம் மாநகர போக்குவரத்து சேவை முடங்கியது.

இதன் காரணமாக பிராட்வே மற்றும் அதனையொட்டி உள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்து பூக்கடை போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய ஆட்டோ டிரைவர் உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்று பஸ் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் பிராட்வே பஸ் நிலையம் நேற்று மாலை பரபரப்புடன் காணப்பட்டது. பயணிகளும், வாகன ஓட்டிகளும் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்