பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் குடிநீர் பிரச்சினை

வெள்ளியணையில் பல ஆண்டுகளுக்கு பின் சீரமைக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-03 18:44 GMT

சமத்துவபுரம் உருவாக்கம்

கரூர் மாவட்டத்தில் முதல் சமத்துவபுரத்தை வெள்ளியணையில் உருவாக்க 1997-ம் ஆண்டு அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி நேரடியாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து பணிகள் விரைவாக நடைபெற்று 100 குடியிருப்புகள், இங்கு குடியேறும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் தெருவிளக்கு, சாலை வசதி, தொடக்க பள்ளி, அங்கான்வாடி மையம், சிறுவர் விளையாட்டு பூங்கா, ரேஷன், கடை, சமுதாய கூடம் ஆகியவையும் கட்டி முடிக்கப்பட்டு, 1999-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.

சிதிலமடைந்த கட்டிடங்கள்

இதனையடுத்து இந்த குடியிருப்புகளில் மாவட்டத்தின் அனைத்து பகுயிலிருந்தும், அனைத்து சாதிகளை சேர்ந்தவர்களும் தேர்வு செய்யபட்டு குடியமர்த்தப்பட்டனர். அதனை தொடர்ந்து வந்த ஆட்சி மாற்றத்தால் இந்த கட்டிடங்கள், சாலைகள், சிறுவர் பூங்கா ஆகியவை பராமரிக்கப்படாமல் சிதிலமடைய தொடங்கி, பயன்படுத்த முடியாத நிலைக்கு போயின.

இதேபோல் குடியிருப்புகளில் கான்கிரீட் பெயர்ந்தும் சுவர்களில் விரிசல் ஏற்பட்டும் குடியிருப்பு வாசிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நிலை உருவானது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை அரசுக்கு தெரிவித்து கோரிக்கை வைத்தாலும் கண்டு கொள்ளப்படாமல் இருந்துவந்தது.

புதிய சாலைகள்

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலுள்ள அனைத்து சமத்துவபுரங்களும் சீரமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி வெள்ளியணை சமத்துவபுரத்திலும் சீரமைப்பு பணிகள் தொடங்கின. முதற்கட்டமாக சமத்துவபுரத்தின் அனைத்து சாலைகளும் செப்பனிடப்பட்டு புதிய தார் சாலையாக மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து குடியிருப்புகள், தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், சமுதாயக்கூடம், ரேஷன் கடை சிறுவர் பூங்கா ஆகியவை மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய வர்ணம் பூசப்பட்டு அப்பகுதி மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.

கோரிக்கை

பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த இந்த பணிகள் தற்போது நடைபெற்று இருப்பது மகிழ்ச்சியை தருவதாக இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தாலும், இப்பகுதி மக்களின் இன்னும் தீராத பிரச்சினையாக இருப்பது குடிநீர் பிரச்சினையே. ஆழ்துளை கிணற்று நீர் சுமார் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் குறைந்த அளவில் குடியிருப்புவாசிகளுக்கு வழங்கப்படுகிறது. இதனை போக்க காவிரி குடி நீர் போதிய அளவு நிரந்தரமாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கடன்வாங்கி பராமரித்தேன்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் பின்வருமாறு:-செல்வராஜ் கூலித்தொழிலாளி:- பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்த எங்களுக்கு இங்கு வீடு வழங்கப்பட்டது. அதன் பின் பல ஆண்டுகள் ஆன நிலையில் குறைந்த வருமானத்தை கொண்டு குடும்பத்தை நடத்தி வரும் எங்களால் பழுதடைந்த வீட்டை பராமரிக்க முடியாமல் இருந்தது. இப்போது பராமரிப்புக்கு நிதி வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் கூறியதால், கடன் வாங்கி வீட்டை பராமரிப்பு செய்தேன். ஆனால் அரசின் நிதி இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த கவலையில் உள்ளேன்.

காவிரி குடிநீர் வேண்டும்

மகாலட்சுமி இல்லத்தரசி:- இங்கு பல ஆண்டுகளாகவே தீராத குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. சுமார் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குறைந்த அளவில் ஆழ்துளை கிணற்று குடிநீர் ஊராட்சி நிர்வாகத்தால் குழாய் மூலம் விநியோகம் செய்யப்படுகிது. இங்கு காவிரி குடிநீர் நிரந்தரமாக கிடைக்க நடவடிக்கை வேண்டும்.நாராயணன் தையல்காரர்:- கரூரில் வாடகை வீட்டில் வசித்து வந்த எனக்கு 1999-ம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.அன்றிலிருந்து இங்கு தான் வசித்து வருகிறேன். நானும் என்னைப் போல் பலரும் கரூரில் செயல்படும் ஏற்றுமதி நிறுவனத்திற்கு வேலைக்கு செல்கிறோம். இதனால்தினந்தோறும் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளியணை கடைவீதி பஸ் நிறுத்தத்துக்கு சென்று பஸ் ஏறி இறங்கி செல்கிறோம். எனவே சமத்துவபுரம் வழியாக காலை மாலை வேளைகளில் பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்