வேதிப்பொருள் கலந்த பாலை குடித்த 4 குழந்தைகள் மயக்கம்

நத்தத்தில், வேதிப்பொருள் கலந்த பாலை குடித்த 4 குழந்தைகள் மயக்கம் அடைந்தனர்.

Update: 2023-08-14 16:38 GMT

நத்தத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு 4 வயதில் மகனும், 10 மாத பெண் குழந்தையும் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரின் 11 வயது, 4 வயதான 2 மகன்கள், விடுமுறை நாளில் விளையாடுவதற்காக கூலித்தொழிலாளியின் வீட்டிற்கு விளையாட வருவார்கள். அதன்படி, நேற்று முன்தினம் உறவினரின் 2 மகன்களும், கூலித்தொழிலாளியின் வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது அவரது 2 குழந்தைகளும், உறவினரின் 2 மகன்களும் சேர்ந்து விளையாடி கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் கூலித்தொழிலாளியின் மனைவி, குழந்தைகளுக்கு பால் காய்ச்சி கொடுக்க முடிவு செய்தார். அதற்காக பாலை காய்ச்சி 4 குழந்தைகளுக்கும் கொடுத்தார். அதனை வாங்கி குழந்தைகள் குடித்தனர். சிறிது நேரத்தில் 4 குழந்தைகளுக்கும் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், 4 குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 4 குழந்தைகளும் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே குழந்தைகள் மயக்கம் அடைந்ததற்கான காரணம் குறித்து விசாரித்தபோது, அவர்கள் குடித்த பாலில் சீனிக்கு பதிலாக மெக்னீசியம் சல்பேட் என்ற வேதிப்பொருளை கலந்தது தெரியவந்தது. கூலித்தொழிலாளியின் வீட்டில் மூட்டு வலி நிவாரணியாக மெக்னீசியம் சல்பேட் வேதிப்பொருளை வைத்திருந்தார். அந்த வேதிப்பொருள் சீனி போன்று இருக்கும். இதனால் கவனிக்காமல் வேதிப்பொருளை கூலித்தொழிலாளியின் மனைவி பாலில் கரைத்தது தெரியவந்தது. இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்