திராவிட மாடல் ஆட்சியை நாடு முழுவதும் ஏற்படுத்த எழுச்சி

திராவிட மாடல் ஆட்சியை நாடு முழுவதும் ஏற்படுத்த எழுச்சி ஏற்பட்டு உள்ளது என்று வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் கூறினார்.

Update: 2023-10-08 19:00 GMT

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தமிழக வக்பு வாரிய தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முதன்மை துணை தலைவருமான அப்துல் ரஹ்மான் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள ஆண்டு நிறைவு விழா அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசுகையில், மக்களிடையே மதரீதியான காழ்ப்புணர்வுகளை தூண்டும் வகையில் பேசியது கண்டனத்துக்குரியது.

தமிழகத்தில் பன்முகத்தன்மை வாய்ந்த அனைத்து சமூக மக்களையும் அரவணைத்து, நல்லிணக்கத்ைத நிலைநாட்டும் வகையில் சிறப்பான திராவிட மாடல் ஆட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். இந்தியா முழுவதும் இதுபோன்ற சிறப்பான ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதை தாங்கி கொள்ள முடியாத பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இது கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முகம்மது அபுபக்கர், மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் முகமது ஷாபி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சையது சுலைமான், வீ.டி.எஸ்.ஆர். இஸ்மாயில், முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ், மாவட்ட செயலாளர் செய்யது பட்டாணி, மாவட்ட பொருளாளர் செய்யது மசூது, முஸ்லிம் லீக் நகர தலைவர் செய்யது மசூது மற்றும் பலர் உடன் இருந்தனர்.

முன்னதாக கடையல்லூருக்கு வந்த தமிழக வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மானுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்