தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறையை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறையை கண்டித்து சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-10-09 21:15 GMT

ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு முறையின்படி 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அதற்கு கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளோ மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களோ அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை கண்டித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணை பொதுச் செயலாளர் இன்பக்கனி, பிரின்ஸ் என்னாரெஸ் பெரியார், வக்கீல் மதிவதனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வீட்டுக்கு அனுப்ப தயார்

ஆர்ப்பாட்டத்தின்போது கி.வீரமணி பேசியதாவது:-

நீட் தேர்வையும் தாண்டி தமிழக மாணவர்கள் டாக்டர்களாக வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தேசிய மருத்துவ ஆணையம் புதிய வழிகாட்டு முறை என்ற பெயரில் 10 லட்சம் பேருக்கு 100 டாக்டர்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மத்திய மருத்துவ கவுன்சிலுக்கு மேற்பார்வை செய்யும் அதிகாரம் மட்டுமே உண்டு. எத்தனை மருத்துவ கல்லூரிகள் வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது மாநில அரசின் முடிவாகும்.

இப்போது அந்த சட்டத்தை மாற்றி வைத்துக்கொண்டு 10 லட்சம் பேருக்கு 100 டாக்டர்கள் என்று அறிவிக்கிறார்கள். மாநிலங்களின் உரிமைகளை அன்றாடம் பறிப்பதுதான் பிரதமர் மோடியின் வேலையாக உள்ளது. இதற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பதில் அளிப்பார்கள். மக்கள் இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராகி விட்டனர். அதற்கு நாம் திண்ணை பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்