டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்சாரணியர் பயிற்சி முகாம்
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சாரணியர் பயிற்சி முகாம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாணவியருக்கு சேவை மனப்பான்மையையும், தேசப்பற்றையும் வளர்க்கும் வகையில் சாரணியர் பயிற்சி முகாம் நடந்தது. ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி தலைமை தாங்கினார். விரிவுரையாளர் நீலாவதி வரவேற்றார். நிறுவன செயலாளர் நாராயண ராஜன் வாழ்த்தி பேசினார்.
தேசிய சாரண பயிற்சியாளர் சங்கர ஆவுடையப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''மாணவர்கள் மனிதநேயத்தோடு பிறருக்கு உதவி புரியவும், நாட்டுப்பற்றோடு தேசத் தொண்டாற்றவும் தயாராக இருக்க வேண்டும். அதற்காக சாரணிய பயிற்சி பெற்று பயன்பெற வேண்டும்'' என்றார்.
மேலும் சாரணருக்குரிய வணக்கம் முறைகள், கைத்தட்டலின் பல்வேறு முறைகள், உறுதிமொழி போன்றவற்றைக் கூறி, பல்வேறு செயல்பாடுகளை கற்றுக் கொடுத்தார். கயிறுகளில் முடிச்சு போடுதல், கை ஒடிந்தவருக்கு கட்டுப்போடும் முறை, நடக்க இயலாதோரை எடுத்து செல்ல படுக்கை அமைக்கும் முறை, கூடாரம் அமைக்கும் முறை, கிணற்றில் விழுந்தவர்களை தூக்கி எடுக்கும் முறை, பல்வேறு தொப்பிகளை தயாரிக்கும் முறைகள் குறித்தும் செயல்விளக்க பயிற்சி அளித்தார்.
மாணவிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு 4 குழு தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு சிறப்பாக தனி உடை அணிவிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இறைவணக்க பாடல், கொடிப்பாடல், தேசிய கீதம் பாடுவதற்கும், சிறப்பு விருந்தினரை வரவேற்கவும், நன்றி கூறி வழியனுப்பவும் பயிற்சி அளிக்கப்பட்டது. சாரணிய பயிற்சியில் பெற்ற பயன்களை மாணவி கோகிலா எடுத்துரைத்தார். விரிவுரையாளர் டெல்சி நன்றி கூறினார்.