ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகத்தில் டாக்டர் தர்ணா
ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகத்தில் டாக்டர் தர்ணா
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் டாக்டர் சக்திபாபு. இவரது தாயார் டாக்டர் நீலம்பாள். சக்திபாபு பெயரில் ஒரத்தநாடு புதூர் கிராமத்தில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அளவீடு செய்து தருமாறு சம்பந்தப்பட்ட ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகத்தில் உள்ள சர்வேயர் பிரிவில் மனு செய்துள்ளார். ஆனால் நிலத்தை அளவீடு செய்து கொடுக்காமல் அலுவலர்கள் காலதாமதம் செய்து வந்துள்ளனர்.இந்தநிலையில் சக்திபாபு நேற்று மதியம் தனது தாயார் நீலாம்பாள் மற்றும் சில வக்கீல்களுடன் ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு தனது பெயரில் உள்ள நிலத்தை அளவீடு செய்து தர முறைப்படி மனு செய்துள்ளதாகவும், ஆனால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து காலதாமதம் செய்வதாக கூறி திடீரென தாசில்தார் அலுவலகத்தின் முகப்பு வாசற்படியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து வருவாய்த்துறை அலுவலர்கள் சக்திபாபுவின் வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தொடர்புடைய நிலத்தை விரைவாக அளந்து விடுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து சக்தி பாபு தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.