சென்னை- நெல்லை இடையே இயக்கப்படும்வந்தே பாரத் ரெயில் விழுப்புரத்தில் நின்று செல்லுமா?பயணிகள் எதிர்பார்ப்பு
சென்னை- நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் விழுப்புரத்தில் நின்று செல்லவேண்டும் என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
முன்பு வசதி படைத்தவர்கள் மட்டுமே அதிக செலவில் நவீன வசதிகளுடன் விமானத்தில் சொகுசாக பயணிக்க முடிந்தது. தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் விமானத்தில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். விழாக்காலங்களில் பஸ், ரெயில்களில் இடம் கிடைக்காதவர்கள் விமானத்தில் பயணிக்கின்றனர்.
வந்தே பாரத் ரெயில்
பல நாடுகளில் அதிவேக ரெயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் வந்தே பாரத் என்ற பெயரில் அதிவேக ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில் சேவை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. குளிர்சாதன வசதி, அதிவிரைவு பயணம் என விமானங்களுக்கு இணையான நவீன சொகுசு வசதிகளுடன் இயக்கப்படும் இந்த ரெயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை பல்வேறு வழித்தடங்களில் 23 ரெயில் சேவைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. பிரதமர் நரேந்திரமோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தில் சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் முழுவதும் உருவாக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில்கள் நாட்டுக்கு பெருமை சேர்க்கின்றன. மத்திய அரசின் ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தர நிலைகள் அமைப்பு மூலம் வடிவாக்கம் செய்யப்பட்ட இந்த ரெயில்களானது விமானத்தில் உள்ள அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டு உள்ளன. இது பயணிகளின் மகிழ்ச்சியான பயணத்துக்கு வழிவகுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சென்னை- நெல்லை இடையே
தமிழகத்துக்குள் இயக்கப்படும் முதலாவது வந்தே பாரத் ரெயில், சென்னை- கோவை இடையே அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இதை ஏற்று சென்னை- மதுரை இடையே வந்தே பாரத் ரெயிலை இயக்கலாம் என்று ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் ரெயில்வேக்கு அதிக வருமானத்தை ஈட்டித்தரும் நெல்லை வரையிலும் வந்தே பாரத் ரெயிலை இயக்கினால் வருமானம் அதிகமாக கிடைப்பதுடன் தென்மாவட்ட மக்களுக்கு கூடுதல் ரெயில் சேவையாகவும், அதுவும் சொகுசு வசதி கொண்ட ரெயில் சேவையாகவும் இது அமையும் என்று வலியுறுத்தப்பட்டது. எனவே சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் இயக்கம்
இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த ரெயில் சேவை அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இயக்க திட்டமிடப்பட்டது. ஆனால் முன்கூட்டியே தண்டவாள மேம்பாட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால் அடுத்த மாதம் (ஆகஸ்டு) இறுதியில் சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரெயிலை இயக்க தெற்கு ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த ரெயிலில் முதல்கட்டமாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு ரெயில் சேவை தொடங்கப்படும் என்றும் பயணிகளின் வரவேற்பை பொறுத்து பின்னர் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிகிறது. இதேபோல் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை படுக்கை வசதிகளுடைய பெட்டிகள் அமல்படுத்தப்பட மாட்டாது என்பதால் 8 பெட்டிகளிலும் இருக்கைகள், உட்கார்ந்து செல்லும் வகையிலேயே அமைக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரத்தில் நிற்காது
மேலும் இந்த ரெயில் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய 4 ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லாது என கூறப்படுகிறது. இது விழுப்புரம் மாவட்ட மக்களிடையேயும் மற்றும் இங்கு வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்த மக்களிடையேயும் மிகுந்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்துள்ளது.
ஏனெனில் விழுப்புரம் மாவட்டத்தில் தென்மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களான கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் பண்டிகை காலங்களிலும் மற்றும் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பெரும்பாலும் விழுப்புரத்தில் இருந்து ரெயில் பயணமாகவே சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு தென்மாவட்ட மக்களுக்கு முக்கிய சந்திப்பாக விழுப்புரம் ரெயில் நிலையம் திகழ்ந்து வருகிறது.
மிகுந்த ஏமாற்றம்
இந்த ரெயில் நிலையம் ஏ தரச்சான்று பெற்ற ரெயில் நிலையமாகவும், ரெயில்வே துறைக்கு அதிக வருவாயை ஈட்டித்தரும் ரெயில் நிலையங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட முக்கிய சந்திப்பாக திகழும் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல நிறுத்தப்பகுதியாக அறிவிக்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே வந்தே பாரத் ரெயில், விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ஏதுவாக தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மத்திய அரசுக்கும், ரெயில்வே துறைக்கும் அழுத்தமாக குரல் கொடுக்க வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதுகுறித்து விழுப்புரம் மக்கள் மற்றும் இங்கு வசிக்கும் தென்மாவட்ட மக்கள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-
நிறுத்தப்பகுதியாக்குவது அவசியம்
விழுப்புரம் ரெயில்வே பயணிகள் சங்கத்தை சேர்ந்த முகமது பிலால்:-
சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்வது என்பது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட விழுப்புரம் ரெயில் நிலையம் என்பது சென்னை, திருச்சி, வேலூர் காட்பாடி, புதுச்சேரி, மயிலாடுதுறை ஆகிய 5 மார்க்கங்களை சந்திக்கிற முக்கிய ரெயில் நிலைய சந்திப்பாக இருக்கிறது. விழுப்புரம் பக்கத்திலேயே புதுச்சேரி யூனியன் பிரதேசமும் உள்ளது. அது முக்கிய சுற்றுலா தலமாகவும் இருக்கிறது. வெளியூர்களை சேர்ந்த மக்கள் கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல விழுப்புரம் வந்து இங்கிருந்து பிரிந்து செல்லும் முக்கிய சந்திப்பாக விழுப்புரம் ரெயில் நிலையம் திகழ்கிறது. எனவே வந்தே பாரத் ரெயில் நின்று செல்லும் இடமாக விழுப்புரம் ரெயில் நிலையத்தை நிறுத்தமாக அறிவித்தால் விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வரும் தென்மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் தென்மாவட்ட மக்களுக்கும் மிகவும் வசதியாக இருக்கும். விழுப்புரம் ரெயில் நிலையத்தை பொறுத்தவரை ஏ தரச்சான்று பெற்ற ரெயில் நிலையமாக இருக்கிறது. அதிகப்படியான வருவாயையும் ஈட்டித்தருகிறது. ஆகவே வந்தே பாரத் ரெயில் நின்று செல்லும் வகையில் விழுப்புரம் ரெயில் நிலையத்தை நிறுத்தப்பகுதியாக அறிவிக்க வேண்டியது அவசியமான ஒன்று. இதற்கு தொகுதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மத்திய அரசையும், ரெயில்வே நிர்வாகத்தையும் வலியுறுத்தி நிறுத்தப்பகுதியாக ஏற்படுத்தித்தர வேண்டும். அதே நேரத்தில் ஏழை, எளிய, நடுத்தர, சாமானிய மக்கள் பயணம் செய்கிற வகையில் இந்த ரெயிலில் கட்டணம் இல்லை, அதிகப்படியான கட்டணமாக இருப்பதால் இந்த கட்டணத்தை குறைத்தால் ஏழை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஏமாற்றம்- அதிருப்தி
விழுப்புரம் மகாராஜபுரத்தை சேர்ந்த ராஜ்குமார்:-
சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் அந்த ரெயில் விழுப்புரத்தில் நிற்காது என்பதால் இங்குள்ள மக்கள் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர். ஏற்கனவே இதே மார்க்கத்தில் இயக்கப்படும் தேஜஸ் ரெயில் விழுப்புரத்தில் நிற்காமல் செல்வதால் இங்குள்ள தென்மாவட்ட மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் வந்தே பாரத் ரெயில் நிச்சயம் விழுப்புரத்தில் நின்றுசெல்ல மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும். இதற்கான முயற்சிகளை தென்னக ரெயில்வே மற்றும் அதன் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் விரைந்து பரிசீலனை செய்ய வேண்டும். இதுவே பெரும்பாலான ரெயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
வருத்தம்
விக்கிரவாண்டி அருகே தொரவியில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த செல்லையா:-
சென்னைக்கும்- திருநெல்வேலிக்கும் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை அடுத்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். ஆனால் இந்த ரெயில் விழுப்புரத்தில் நின்று செல்லாது என்பது வருத்தமாக உள்ளது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் விழுப்புரத்தில் நின்று செல்கின்றன. மற்ற ரெயில்களை விட பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை தரும் வந்தே பாரத் ரெயிலில் நவீன வசதிகளும் மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்துள்ளன. ஆனால் இந்த ரெயில் விழுப்புரத்தில் நின்று செல்லாது என்பது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இதனால் வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்ய மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த அனைவருக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. எனவே பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய ரெயில்வே அமைச்சரும் வந்தே பாரத் ரெயில், விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவண செய்ய வேண்டும்.
கட்டணத்தை குறைக்கவேண்டும்
விழுப்புரத்தில் ஓட்டல் நடத்தி வரும் நெல்லை வல்லநாடு கிராமத்தை சேர்ந்த கண்ணன்:-
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்வதற்கு பகல் நேரத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை விட்டால் வேறு எந்தவொரு ரெயில் போக்குவரத்தும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் பகல் நேர ரெயிலாக வந்தே பாரத் என்ற அதிவேக ரெயிலை இயக்குவது மிகுந்த வரவேற்புக்குரியது. நீண்ட நாள் கோரிக்கை வந்தே பாரத் ரெயிலின் மூலம் நிறைவேறியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் அதே வேளையில் இந்த ரெயில் விழுப்புரத்தில் நின்று செல்லாது என்பதால் விழுப்புரத்தில் வசிக்கும் தென்மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி பக்கத்தில் உள்ள கடலூர், புதுச்சேரியில் வசித்து வரும் தென்மாவட்ட மக்களுக்கும் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இங்கிருந்து நெல்லைக்கு பஸ் மற்றும் பிற ரெயில்களில் செல்ல 10 மணி நேரம் வரை ஆகிறது. ஆனால் வந்தே பாரத் ரெயில் மூலம் 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே நெல்லைக்கு சென்றடையலாம். இதன் மூலம் பயண நேரமும் மிச்சமாகிறது. ஆகவே இந்த ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைத்து விழுப்புரத்தில் நின்றுசெல்ல மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேநேரத்தில் இந்த ரெயிலில் கட்டணம் அதிகமாக உள்ளதாக அறிகிறோம். எனவே அனைத்து தரப்பு மக்களும் வந்தே பாரத் ரெயிலை பயன்படுத்தும் வகையில் கட்டணத்தை குறைத்து இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.