இந்து மதத்திற்கு எதிராக கேள்வி கேட்பவர்கள் மற்ற மதத்தில் உள்ள குறைகளை கேட்பார்களா? - நிர்மலா சீதாராமன்

அரசியல் சாசன உறுதிமொழியை எடுத்துக்கொண்டு மதத்தை ஒழிப்பேன் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

Update: 2023-09-16 19:24 GMT

நிர்மலா சீதாராமன் பேட்டி

சென்னை எம்.ஆர்.சி. நகரில் நேற்று நடைபெற்ற கணக்கு தணிக்கையாளர்கள் அமைப்பின் 90-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

சனாதனம்

கேள்வி:- தமிழகத்தில் சமீப காலமாக சனாதனம் தொடர்பான கருத்துகள் பல்வேறு விதமாக பேசப்படுகிறது. உண்மையில் சனாதனம் என்றால் என்ன?.

பதில்:- அரசியல் சாசனப்படி, உறுதிமொழி எடுத்துக்கொண்டு அமைச்சராக பொறுப்பு ஏற்கிறோம். அப்படி இருக்கும்போது, என்னதான் நமது கொள்கை என்றாலும், ஏதோ ஒரு மதத்தை ஒழிப்பேன் என்று சொல்வதற்கான அதிகாரம் யாருக்கும் இல்லை. முக்கியமாக அமைச்சருக்கு அது இல்லவே இல்லை.

அமைச்சர்கள் பொறுப்பாக பேச வேண்டும்

ஒரு பொது மேடையில் இருந்து கொண்டு ஒழிக்கப்போகிறேன் என்று சொன்னால், அது ரொம்ப தப்பு. அப்படி ஒழிப்பேன் என்று சொல்லவில்லை என்று இப்போது சொல்வது பொருந்தாது. சனாதனத்தை எதிர்க்கும் மாநாடு இது இல்லை, ஒழிக்கின்ற மாநாடு என்று கூறினார். அமைச்சராக இருப்பவர் பொறுப்பாக பேச வேண்டும். அதே மேடையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் இருந்திருக்கிறார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்

இந்து கோவில்களில் இருந்து வரும் பணம், லட்டு மாதிரி நன்றாக இருக்கிறது அல்லவா?. இப்படி பேசிவிட்டு அதற்கு எதிர்ப்பு வரக்கூடாது என்று எதிர்பார்ப்பது தவறு. உங்கள் கொள்கை அதுதான். தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்தவர்களுக்கு அது நன்றாக தெரியும். இதுதான் சனாதனத்தை பற்றி நான் சொல்வது.

கேள்வி:- ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும் நாடாளுமன்ற தேர்தலிலேயே வருமா?.

பதில்:- இப்போது வரும், அப்போது வரும் என்று சொல்கின்றவர்கள் சொல்வார்கள். ஆனால், எப்போது சொல்ல வேண்டுமோ அப்போது சொல்வார்கள். எனக்கு ஒன்றும் இல்லை.

கேள்வி:- தமிழகத்தில் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?.

பதில்:- தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்ற பார்க்கிறார்கள்.

எங்கள் கூட்டணியில் சொல்வோம்

கேள்வி:- நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு சனாதனம் இருக்காது என்று சொல்கிறார்களே?.

பதில்:- இதை நாங்கள் போய் எங்கள் கூட்டணியில் சொல்வோம். இந்தியா கூட்டணியில் இருக்கின்ற தி.மு.க. அமைச்சர் தேர்தலுக்காக சொன்னார் என்று திருமாவளவன் கூறியதாக நீங்கள் சொல்வதை சொல்லிவிடுவேன்.

கேள்வி:- சனாதனத்தை 100 ஆண்டுகள் பேசுவோம் என்று கூறியிருக்கிறார்களே?.

பதில்:- இறைவன் இல்லை என்று சொன்னவர்கள் கூட சனாதனத்தில் வர்ணிக்கப்பட்டிருக்கிறார்கள். இது புதிது கிடையாது. எல்லோருக்கும் அதிகாரம் இருக்கிறது, பண்ணலாம். ஆனால், ஒரு அமைச்சராக பதவியேற்றுவிட்ட பிறகு, உங்களது பொறுப்புகளை ஞாபகம் வைத்துக்கொண்டு பேசவும். வன்முறையை கிளப்பும் வார்த்தையை கூறுவது தவறு. மதங்களுக்கு இடையேயும், சாதிகளுக்கு இடையேயும் காழ்ப்புணர்ச்சி வராத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

வேதனை

இதே தமிழ்நாட்டில் நான் கண்ணால் கண்ட காட்சியை சொல்கிறேன். உங்களுக்கு ராமர் பிடிக்காமல் இருக்கலாம். அவர் தெய்வம் இல்லை, என்ஜினீயர் இல்லை என்று சொல்லலாம். அவர் சேது பாலத்தை கட்டினாரா? என்று கேட்கலாம். நான் கண்ணால் பார்த்த விஷயத்தை இன்றைக்கும் வேதனையோடு சொல்கிறேன். உங்களுக்கு ராமர் பெரியவர் இல்லை. ராமர் கழுத்தில் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடத்திய தமிழ்நாட்டில் நான் வளர்ந்து இருக்கிறேன்.

அந்தவொரு முயற்சிக்கு வேறு ஒரு மதமாக இருந்தால் என்னவாகியிருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், சனாதனத்தில் அது இல்லை. சனாதனத்தை நம்பும் இந்துக்களுக்கு, ராமருக்கு செருப்பு மாலையே போட்டாலும் வன்முறையில் இங்கே ஈடுபடவில்லை. அதுதான் சனாதனம்.

வன்முறையே கூடாது

கேள்வி:- சாமியார் ஒருவர் அமைச்சர் உதயநிதி தலைக்கு விலை வைத்தாரே. அது சரியா?

பதில்:- வன்முறையே கூடாது என்று நான் சொல்லும்போது, இதை எப்படி நான் சரி என்பேன். பேச்சு மூலமான வன்முறையாக இருந்தாலும், செயல் மூலமான வன்முறையாக இருந்தாலும், வன்முறைக்கு வன்முறை பதில் இல்லை. அதை நான் கட்டாயம் நம்புகிறேன், சொல்லவும் செய்வேன்.

ராமருக்கே செருப்பு மாலை போட்டார்கள். அதற்கு என்ன பதிலடி கிடைத்தது. ஒன்றும் கிடையாது. அதையும் பார்த்துவிட்டு, அவர்கள் தொழிலை பார்ப்பதுதான் சனாதன தர்மம். இதர மதங்களில் பெண்களுக்கு இழிவான செயல் நடக்காமல் இருக்கிறதா?. அதைப்பற்றி பேச, தைரியம், முதுகெலும்போ இருக்கிறதா?.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்