8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு கோர்ட்டில் மீண்டும் மனு

வேங்கைவயல் விவகாரத்தில் 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் மனு தாக்கல் செய்தனர்.

Update: 2023-06-27 18:03 GMT

வேங்கைவயல்

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 180-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரித்துள்ளனர். மேலும் அறிவியல் ரீதியாக தடயங்களை சேகரிப்பதற்காக விசாரணை நடத்தப்பட்டவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடவடிக்கையை கையாண்டுள்ளனர். இதில் 11 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனையும், 2 பேரிடம் குரல் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது. இதன் பரிசோதனை முடிவு அறிக்கைகள் தடயவியல் ஆய்வகத்தில் இருந்து வரவேண்டியது உள்ளது.

கோர்ட்டில் மனு

இந்த நிலையில் வேங்கைவயல் பகுதியை சேர்ந்த 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த புதுக்கோட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் அந்த 8 பேரும் டி.என்.ஏ. பரிசோதனைக்கு வர மறுத்தனர். மேலும் டி.என்.ஏ. பரிசோதனையை எதிர்த்து ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை பொறுத்தவரை விஞ்ஞானபூர்வ ரீதியில் தடயங்களை சேகரித்தால் மட்டுமே தீர்வு காண முடியும் என கோர்ட்டு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் ஒரு மனுவை இன்று தாக்கல் செய்தனர். கோர்ட்டு அனுமதி அளித்ததும், அந்த 8 பேருக்கு, டி.என்.ஏ. பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் சிறுவர்கள் 4 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்