வாகனம் மோதி தி.மு.க. பிரமுகர் பலி
பொன்னமராவதி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தி.மு.க. பிரமுகர் பலியானார்.
தி.மு.க. பிரமுகர்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுவளவு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 49). தி.மு.க. பிரமுகரான இவர் பொன்னமராவதி 4-வது வார்டு செயலாளராக இருந்தார். மேலும் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் செல்போன் கடையை பூட்டிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது வலையப்பட்டி அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சிகிச்சை பலனின்றி சாவு
இதில், படுகாயம் அடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான கார்த்திகேயனுக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.