மத்திய அரசு எந்த மசோதாவை கொண்டு வந்தாலும் தி.மு.க. அரசு மீனவர்கள் பக்கம் தான் - உதயநிதி ஸ்டாலின்
மத்திய அரசு எந்த மசோதாவை கொண்டு வந்தாலும் தி.மு.க. அரசு மீனவர்கள் பக்கம் தான் இருக்கும் என உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.
ராஜாக்கமங்கலம்:
மத்திய அரசு எந்த மசோதாவை கொண்டு வந்தாலும் தி.மு.க. அரசு மீனவர்கள் பக்கம் தான் இருக்கும் என உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.
மீனவர் தின விழா
கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்கம், குமரி மாவட்ட மீனவர்கள் கூட்டமைப்பு, தமிழக அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகியவற்றின் சார்பில் உலக மீனவர் தின வெள்ளி விழா கொண்டாட்டம் முட்டத்தில் நேற்று நடந்தது.
இதனையொட்டி நடந்த பொதுக்கூட்டத்திற்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கினார். துணை தலைவர் சகாயராஜ், தி.மு.க. மாநில சிறுபான்மை நல உரிமைப்பிரிவு இணைச் செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின், என்.சி.வி.டி தேசிய பொதுக்குழு உறுப்பினர் தாரகை கத்பர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முட்டம் பங்குத்தந்தை அமல்ராஜ் வரவேற்றார். கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய இயக்குனர் டன்ஸ்டன் தொடக்கவுரை ஆற்றினார்.
உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
இதில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், சிறப்பாக மீன் வளர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கும் பரிசுகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
5 லட்சம் மீனவ மக்கள்
இயற்கையோடு இணைந்து வாழக்கூடிய உங்களோடு இந்த மீனவர் தின விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். 48 கிராம மீனவ மக்கள், உள்நாட்டு மீனவ மக்கள் என குமரி மாவட்டத்தில் கடல் சார்ந்து வாழக்கூடியவர்கள் ஏறக்குறைய 5 லட்சம் பேர் இருக்கிறார்கள். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உங்கள் வாழ்க்கைத்தரம் உயர பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அதேபோல் அவரது வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும் மீனவர்கள் நலனுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கோரிக்கைகள் பரிசீலனை
மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ஏற்கனவே ரூ.5 ஆயிரமாக இருந்தது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நாங்கள் 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தரப்படும் என்று சொல்லியிருந்தோம். தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.6 ஆயிரமாக உயர்த்தி கொடுத்து வருகிறார். விரைவில் அது ரூ.8 ஆயிரமாக உயர்த்திக் கொடுக்கப்படும்.
14 கடற்கரை மாவட்டங்களில் 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று சொல்லியிருக்கிறோம். அதுவும் படிப்படியாக கட்டித்தரப்படும். கடலில் மீனவர்கள் காணாமல் போனால் 7 ஆண்டுகள் கழித்து தான் இறப்புச் சான்று வழங்கப்படும் என்ற நடைமுறையை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளீர்கள். அதையும் அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு கண்டிப்பாக அழுத்தம் தரப்படும். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓய்வூதியம், கடலில் காணாமல் போனவர்களை மீட்க கடல் ஆம்புலன்ஸ் திட்டம், சர்வதேச அளவிலான அடையாள அட்டை என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளது.
மீனவர்களுக்கு தயக்கம் வேண்டாம்
பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம், சாகர்மாலா திட்டம் போன்றவை வந்தால் மக்களை அப்புறப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். அதற்கு தி.மு.க. அரசு என்றுமே ஒப்புக்கொள்ளாது. என்னிடம் 13 கோரிக்கைகளை நீங்கள் அளித்துள்ளீர்கள்.
உங்கள் கோரிக்கைகள் குறித்து நீங்கள் எண்ணுவது போல் முதல்-அமைச்சரிடம் எடுத்துச் சென்று அதற்கு தீர்வு காணும் பணியை திராவிட மாடல் அரசு, தி.மு.க. அரசு மேற்கொள்ளும் என வாக்குறுதி அளிக்கிறேன். மத்திய அரசு மீனவர்களுக்கு எதிராக எந்த மசோதாக்களை கொண்டு வந்தாலும், மீனவர்கள் பக்கம் தான் தி.மு.க. அரசு இருக்கும். அதனால் உங்களுக்கு எந்த தயக்கமும் வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
சாமிதோப்பு தலைமைப்பதியில் தரிசனம்
முன்னதாக அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி, நாகர்கோவில் மேயர் மகேஷ், மீன்வளத்துறை ஆணையர் பழனிசாமி, குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாநில தலைமை மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், மீனவரணி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் நசரேத் பசலியான் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை அருட்பணியாளர் சர்ச்சில், குறும்பனை பெர்லின், நாஞ்சில் மைக்கேல் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
முன்னதாக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. சாமிதோப்பு தலைமைப்பதியில் தரிசனம் செய்தார்.